கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமை குட்டி உயிருடன் மீட்பு


கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமை குட்டி உயிருடன் மீட்பு
x
தினத்தந்தி 23 Nov 2021 8:43 PM IST (Updated: 23 Nov 2021 8:43 PM IST)
t-max-icont-min-icon

கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமை குட்டி உயிருடன் மீட்பு

ஊட்டி

குன்னூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமை குட்டி உயிருடன் மீட்கப்பட்டது. 

காட்டெருமை குட்டி 

நீலகிரி வன கோட்டத்துக்கு உட்பட்ட குன்னூர் மற்றும் சுற்றுப்புற வனப்பகுதிகளில் காட்டெருமைகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்புகள், தேயிலை தோட்டங்களுக்குள் புகுந்து வருகின்றன. 

இந்தநிலையில் நேற்று குன்னூர் அருகே உபதலை ஆலோரை கிராம பகுதியில் ரெயில் தண்டவாளம் அருகே குட்டிகளுடன் காட்டெருமைகள் கூட்டமாக சென்றன. அப்போது குடியிருப்பையொட்டி இருந்த திறந்தவெளி கிணற்றில் கூட்டத்தில் வந்த காட்டெருமை குட்டி தவறி விழுந்தது. 

உயிருடன் மீட்பு

சுமார் 20 அடி ஆழ கிணற்றில் சிறிதளவுக்கு மட்டுமே தண்ணீர் இருந்த தால் அந்த காட்டெருமை குட்டியால் வெளியே வர முடியவில்லை. இதனால் அது தவித்ததுடன், அலறியபடி இருந்தது. இது குறித்து தகவல் அறிந்த குன்னூர் வனச்சரக அதிகாரி சசிகுமார் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

பின்னர் அங்கு வந்த கால்நடை டாக்டர் பார்த்தசாரதி மற்றும் தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி அந்த காட்டெருமை குட்டியை உயிருடன் மீட்டனர். பின்னர் அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 

தாயுடன் சேர்ப்பு 

இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, கிணற்றில் தவறி விழுந்தது 4 மாத காட்டெருமை குட்டி ஆகும். அந்த குட்டியை தேடி தாய் காட்டெருமை தவித்தபடி அங்குமிங்கும் சுற்றியது. 2 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் அந்த குட்டி உயிருடன் மீட்கப்பட்டு, தாயுடன் சேர்க்கப்பட்டது என்றனர். 

குன்னூர் சிம்ஸ் பூங்கா அருகே உள்ள அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் நேற்று முன்தினம் காட்டெருமைகள் புகுந்தன. நுழைவுவாயிலில் கூட்டமாக காட்டெருமைகள் நின்றதால், பயிற்சி நிலைய அதிகாரிகள் மற்றும் மாணவர்கள் உள்ளே செல்ல முடியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து காட்டெருமைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.


Next Story