வீட்டை உடைத்து காட்டு யானைகள் அட்டகாசம்
வீட்டை உடைத்து காட்டு யானைகள் அட்டகாசம்
கூடலூர்
கூடலூர் அருகே வீட்டை உடைத்து காட்டு யானைகள் அட்டகாசத்தில் ஈடுபட்டன. எனவே கும்கிகள் உதவியுடன் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
காட்டு யானைகள்
கூடலூர் தாலுகா பாடந்தொரை மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் 2 காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து இதுவரை சுமார் 20- க்கும் மேற்பட்ட பொதுமக்களின் வீடுகளை உடைத்து உள்ளது. எனவே காட்டு யானைகளின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த முதுமலையில் இருந்து 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன.
இதற்கிடையே கும்கி யானைகளுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மீண்டும் முதுமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் அங்கு மீண்டும் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்தது. இதையடுத்து முதுமலை யில் இருந்து சீனிவாசன், உதயன் என்ற 2 கும்கி யானைகள் நேற்று முன் தினம் பாடந்தொரை பகுதிக்கு கொண்டு வரப்பட்டது.
வீட்டை உடைத்து அட்டகாசம்
இதனால் அங்கு முகாமிட்டு இருந்த காட்டு யானைகள் இடம்பெயர்ந்து வேடன் வயல்பகுதிக்கு சென்றது. பின்னர் அங்குள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மரியாயி (வயது 65) என்பவரின் வீட்டை உடைத்தது. பின்னர் வீட்டில் இருந்த அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை தூக்கி வீசியதுடன் அவற்றை தின்றும் அட்டகாசத்தில் ஈடுபட்டது.
இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த காட்டு யானைகளை துரத்தினார்கள். இதனால் காட்டு யானைகள் செளுக்காடி பகுதிக்கு சென்றது. இதைத்தொடர்ந்து இரவு முழுவதும் கும்கி யானைகள் உதவியுடன் வனத்துறையினர் ரோந்து பணி மேற்கொண்டனர்.
கும்கிகள்
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, கும்கி யானைகள் நடமாட்டம் இருந்தால் காட்டு யானைகள் இடம்பெயர்ந்து சென்று விடும். அதனால் கும்கிகள் உதவியுடன் கேரளா வனப்பகுதிக்கு காட்டு யானைகளை விரட்டியடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது என்றனர்.
Related Tags :
Next Story