தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 23 Nov 2021 9:26 PM IST (Updated: 23 Nov 2021 9:26 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குப்பையால் சுகாதாரக்கேடு 

நெல்லை மாவட்டம் வடக்கு வள்ளியூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் பொதுமக்கள் சிலர் குப்பைகளை கொட்டுகிறார்கள். இதனால் அங்குள்ள சந்தை தெரு பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
கோசலைராமன், வடக்கு வள்ளியூர்.
* கூடங்குளம் வடக்கு பஸ் நிறுத்தத்தில் இருந்து மேற்கு நோக்கி செல்லும் சாலையோரங்களில் பல்வேறு இடங்களில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. தற்போது பெய்த மழையால் குப்பைகளுடன் மழைநீரும் சேர்ந்து துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம். 

பழுதடைந்த அடிபம்பு சரிசெய்யப்படுமா?

நாங்குநேரி தாலுகா மூலைக்கரைப்பட்டி நகர பஞ்சாயத்துக்கு உட்பட்ட 13-வது வார்டு கிழக்கு தெருவில் உள்ள அடிபம்பு சுமார் 1 ஆண்டுக்கு மேலாக பழுதான நிலையில் உள்ளது. இதுகுறித்து பலமுறை மனு கொடுக்கும் நடவடிக்கை இல்லை. எனவே, பழுதடைந்த இந்த அடிபம்பை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
மணிகண்டன், மூலைக்கரைப்பட்டி.

மின்கம்பத்தை சூழ்ந்த மரக்கிளைகள் 

தென்காசி மாவட்டம் கடையம் யூனியன் முதலியார்பட்டி பஞ்சாயத்து காந்திநகர் பகுதி 3-வது தெருவுக்கு அருகே மெயின் ரோட்டில் அமைந்துள்ள மின்கம்பத்தில் இருந்து அங்குள்ள ஏராளமான வீடுகள், கடைகளுக்கு மின்இணைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. பல மாதங்களாக சாலையோர புளியமரத்தின் கிளைகள் அதிக அளவில் வளர்ந்து மின்கம்பத்தை சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் மரக்கிளைகள் மின் ஒயர்கள் மீது உரசி அடிக்கடி தீப்பொறி பறப்பதுடன், மின்தடையும் ஏற்படுகிறது. எனவே, மின்கம்பத்தை சூழ்ந்துள்ள மரக்கிளையை மின்வாரிய அதிகாரிகள் வெட்டி அகற்ற கேட்டுக்கொள்கிறேன்.
பக்கீர் மைதீன், முதலியார்பட்டி.

பயணிகள் நிழற்கூடம் புதுப்பிக்கப்படுமா?

வீரகேரளம்புதூர் தாலுகா கீழக்கலங்கல் பெரிய கிராமத்தில் பெட்ரோல் பங்க் பஸ் நிறுத்தம் பகுதியில் நிழற்கூடம் உள்ளது. இந்த நிழற்கூடத்தின் மேற்கூரை சிமெண்டு காங்கிரீட் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் அங்கு நின்று பஸ் ஏற பயணிகள் அச்சப்படுகிறார்கள். எனவே, இதை அகற்றிவிட்டு இருக்கை வசதிகளுடன் புதிய நிழற்கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
டெக்கான், கீழக்கலங்கல்.

சாலையில் தேங்கும் கழிவுநீர்

தென்காசி மாவட்டம் குறிச்சான்பட்டி கிராமம் பிள்ளையார் கோவில் தெருவில் இருந்து மயானத்திற்கு செல்லும் சாலையில் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதன் அருகில் அங்கன்வாடி மையம், துணை ஆரம்ப சுகாதார நிலையம், ரேஷன் கடைகள் உள்ளன. சாலையில் கழிவுநீர் தேங்கி இருப்பதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இனியாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
சவுந்தர், குறிச்சான்பட்டி.

குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்

கடையம் மெயின் ரோட்டில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த ஒரு வாரமாக தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் அங்கு பள்ளம் ஏற்பட்டு, இரவு நேரங்களில் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடையும் அவலம் உள்ளது. எனவே, பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நலன்கருதி குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
திருக்குமரன், கடையம்.

பஸ் நிலையத்தில் சுற்றித்திரியும் மாடுகள் 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையத்திற்கு தினமும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானவர்கள் வந்து செல்கிறார்கள். ஆனால், இந்த பஸ் நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக ஏராளமான மாடுகள் சுற்றித்திரிகின்றது. சில சமயங்களில் பயணிகளை முட்டி காயம் ஏற்படுத்துகிறது. மேலும், பஸ் நிலைய வியாபாரிகளுக்கும் மாடுகளால் இடையூறு ஏற்படுகிறது. ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஸ் நிலையத்தில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க வேண்டும்.
தமிழ்பரிதி, திருச்செந்தூர்.
* இதேபோல் முள்ளக்காடு எம்.சவேரியார்புரம், ஸ்பிக்நகர், முத்தையாபுரம் மெயின் பஜாரில் மாடுகள் சுற்றித்திரிகின்றது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்குகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுப்பார்களா?
மகேந்திரன், ஸ்பிக்நகர்.



Next Story