பாதுகாப்புக்குழுவை அமைப்பது அவசியம்


பாதுகாப்புக்குழுவை அமைப்பது அவசியம்
x
தினத்தந்தி 23 Nov 2021 9:29 PM IST (Updated: 23 Nov 2021 9:29 PM IST)
t-max-icont-min-icon

பள்ளிகளிலும் குழந்தைகள் பாதுகாப்புக்குழுவை அமைப்பது அவசியம்

திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகள் பாதுகாப்புக்குழுவை அமைப்பது அவசியம் என்று கலெக்டர் வினீத் அறிவுறுத்தினார்.
குழந்தைகள் பாதுகாப்புக்குழு
திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மற்றும் மாவட்ட காவல்துறை சார்பில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012 குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு கலெக்டர் வினீத் தலைமை தாங்கி பேசும்போது, பள்ளி மாணவ மாணவிகளுக்கு பாலியல் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டி வைப்பது அவசியம். 1098, 14177, 181 ஆகிய புகார் எண்களை அச்சிட வேண்டும். பாலியல் புகார்களை விசாரிக்கும் விசாகா கமிட்டி அனைத்து பள்ளிகளிலும் அமைக்க வேண்டும். அவ்வாறு அமைக்காத பள்ளிகளிலும் உடனடியாக கமிட்டியை அமைக்க வேண்டும். குழந்தைகள் பாதுகாப்பு குழுவை அனைத்து பள்ளிகளிலும் ஏற்படுத்த வேண்டும். கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டத்தில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பங்கேற்பது அவசியம் என்றார்.
விழிப்புணர்வு
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் பேசும்போது, பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் நிகழ்ந்தால் உடனடியாக தகவல் காவல்துறைக்கு அச்சம் இல்லாமல் தெரிவிக்க வேண்டும். எக்காரணத்தை கொண்டும் மறைக்கக்கூடாது. பாலியல் புகார் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் காவல்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மகளிர் போலீசாரை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றார்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், போக்சோ வழக்குப்பதிவில் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள், சந்தித்த வழக்குகள், இளம்பெண்களின் மனநிலை, மதுவால் வாழ்க்கையை சீரழித்தவர்கள் குறித்து தெரிவித்தார்கள்.
இந்த கூட்டத்தில் குழந்தைகள் நலக்குழு தலைவர் ஆறுச்சாமி, பெண்கள், குழந்தைகள் குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பொன்னுச்சாமி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புக்குழு பாதுகாப்பு அலுவலர்கள் ராஜசேகர், தேவகி, சைல்டுலைன் அமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் தினேஷ்பாபு, கதிர்வேல், உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

Next Story