மரங்களை வெட்டியதால் வாழ்வாதாரம் பாதிப்பு
மரங்களை வெட்டியதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்று தேனி கலெக்டரிடம் விவசாயிகள் மனு கொடுத்தனர்.
தேனி:
வருசநாடு அருகே தங்கம்மாள்புரம் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் சிலர் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். மாவட்ட கலெக்டர் முரளிதரனிடம் அவர்கள் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், "நாங்கள் தங்கம்மாள்புரம் சுற்றுவட்டார பகுதியில் பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறோம்.
சில நாட்களுக்கு முன்பு வனத்துறையினர், நாங்கள் இல்லாத நேரத்தில் அங்கு வந்து நாங்கள் வளர்த்து வந்த மரங்களையும், மரக்கன்றுகளையும் வெட்டி அழித்துவிட்டு சென்றனர். இதனால், எங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே, வனத்துறையின் செயல்பாட்டை தடுத்து எங்களின் வாழ்வாதாரத்துக்கு வழிவகுக்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.
இதேபோல் தங்கம்மாள்புரம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் 15 பேர், கடமலைக்குண்டு போலீஸ் நிலையத்துக்கு நேற்று வந்தனர். பின்னர் அவர்கள், தாங்கள் வளர்த்த இலவம் மரங்களை வனத்துறையினர் வெட்டி விட்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி புகார் மனு கொடுத்தனர்.
கடந்த 2 நாட்களில், இலவம் மரங்களை வெட்டியதாக வருசநாடு மற்றும் உப்புத்துறை பகுதியை சேர்ந்த 35 விவசாயிகள் வனத்துறையினர் மீது போலீஸ் நிலையங்களில் புகார் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story