வேலூர் மாவட்டத்தில் மழைவெள்ள சேதங்களை மத்திய குழுவினர் ஆய்வு


வேலூர் மாவட்டத்தில் மழைவெள்ள சேதங்களை மத்திய குழுவினர் ஆய்வு
x
தினத்தந்தி 23 Nov 2021 10:54 PM IST (Updated: 23 Nov 2021 10:54 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் மழைவெள்ள சேதங்களை மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது முழுமையான சேதவிவரங்களை கணக்கிட்டு உரிய தொகையை கேட்க மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்தனர்.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் மழைவெள்ள சேதங்களை மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது முழுமையான சேதவிவரங்களை கணக்கிட்டு உரிய தொகையை கேட்க மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்தனர்.

மத்திய குழுவினர் வருகை

வேலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையால் ஏராளமான விவசாய பயிர்கள் சேதமடைந்தன. மேலும் வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. மாவட்டத்தில் ஏற்பட்ட சேதம் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு செய்ய வேலூருக்கு நேற்று வந்தனர்.
மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினங்கள் பிரிவு ஆலோசகர் ஆர்.பி.கவுல், நீர்வளத்துறை அமைச்சகத்தின் இயக்குனர் ஆர்.தங்கமணி, எரிசக்தி துறை உதவி இயக்குனர் பவ்யாபாண்டே மற்றும் தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் முதன்மை செயலாளர் குமார்ஜெயந்த், தமிழக மின் ஆளுமை முகமையின் இணை இயக்குனர் எஸ்.வெங்கடேஷ் ஆகிய 5 பேர் அடங்கிய குழுவினர் காட்பாடியில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று அரசு அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தினர்.

இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன், கதிர்ஆனந்த் எம்.பி. மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். அங்கு ஒரு அரங்கில், வேலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தகவல்கள் அடங்கிய புகைப்படங்கள் மற்றும் பயிர்கள் வைக்கப்பட்டிருந்தன. அதனை அவர்கள் பார்வையிட்டனர். அப்போது மத்திய குழுவினருக்கு சேதவிவரங்கள் குறித்து கலெக்டர் குமாரவேல்பாண்டியன் விளக்கி கூறினார். அப்போது முழுமையான சேதவிவரங்களை கணக்கிட்டு உரிய தொகையை கேட்க அறிவுரை வழங்கினர். 

களஆய்வு

இதையடுத்து, காட்பாடி தாலுகா குகையநல்லூர் ஊராட்சியில் மழையால் சேதமடைந்த பஞ்சாட்சரம் என்ற விவசாயியின் நிலத்தை மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். அங்கு அந்த விவசாயியிடம் மத்திய குழுவினர் விசாரணை நடத்தினர்.

அப்போது பஞ்சாட்சரம் கூறுகையில், நான் 5 ஏக்கர் நிலப்பரப்பில் கடன் வாங்கி நெற்பயிர் பயிரிட்டேன். அறுவடைக்கு சில நாட்கள் முன்பு மழையின் காரணமாக பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. இதனால் பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டது. உரிய நிவாரணம் வழங்கவேண்டும் என்றார்.

அதைத்தொடர்ந்து, மேல்பாடி பொன்ணையாற்றின் நடுவே உள்ள வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலத்தை குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது தரைப்பாலம் சேதமடைந்தது குறித்து கேட்டறிந்தனர். பின்னர் ஆற்றில் பாய்ந்தோடும் வெள்ளத்தை பார்வையிட்டனர். இதையடுத்து பொன்னை அணைக்கட்டை ஆய்வு செய்தனர். அங்கு அணைக்கட்டில் இருந்து வெளியேறிச் செல்லும் நீரின் அளவு குறித்தும், ஏரிகளுக்கு செல்லும் கால்வாய் நீரின் அளவு குறித்தும் பொதுப்பணித்துறை அதிகாரியிடம் கேட்டறிந்தனர்.
திருத்தணி- சித்தூர் சாலை பொன்னை பகுதியில் அமைந்துள்ள பொன்னை ஆற்றுப்பாலத்தை ஆய்வு செய்தனர். மழை வெள்ளத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு பாலம் பூமியில் இறங்கி சேதமடைந்துள்ளதை அவர்கள் பார்வையிட்டனர். ஆய்வின்போது ஜெகத்ரட்சகன் எம்.பி., ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. மற்றும் கட்சியினர் பலர் உடனிருந்தனர்.
ஆய்வுக்கு பின்னர் மத்திய குழுவினர் கூறுகையில், ஆய்வு செய்வதற்காக இங்கு வந்துள்ளோம். .இதன் விவரம் அரசுக்கு தெரிவிக்கப்படும் என்றனர்.

இழப்பீடு வழங்க நடவடிக்கை

வேலூர் மாவட்டத்தில் வெள்ளசேதம் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். ஆய்வுக்கு பின்னர் அவர்களுடன் சென்ற வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மழையின் காரணமாக வேலூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பாதிப்புகளுக்கு இழப்பீடு கேட்டு அரசுக்கு பரிந்துரை செய்தோம். அதன்பேரில் மத்திய குழுவினர் வேலூர் மாவட்டத்தில் ஆய்வு செய்தனர். இழப்பு குறித்து அனைத்து முழு விவரங்களும் கணக்கீடு செய்யப்பட்டு 2 நாட்களுக்குப் பின்னர் அவை தெரிவிக்கப்படும். சேதம் குறித்து மத்திய குழுவினருக்கு தெரிவிக்கப்பட்டது. அப்போது முழுமையான சேத விவரத்தை தெரிவித்து உரிய தொகை கேளுங்கள் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் பாதிப்படைந்த அனைத்து விவசாயிகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு, ஒருவர்கூட விடுபடாதவாறு அவர்களுக்கான இழப்பீடு தொகை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story