வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட கிராமங்களுக்கு இடையே இரும்பு பாலம் அமைப்பு
குடியாத்தம் அருகே மழை வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட கிராமங்களுக்கு இடையே இரும்பு பாலம் அமைக்கப்பட்டது.
குடியாத்தம்
குடியாத்தம் அருகே மழை வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட கிராமங்களுக்கு இடையே இரும்பு பாலம் அமைக்கப்பட்டது.
கிராமங்கள் துண்டிப்பு
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கவுண்டன்ய மகாநதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் இரண்டாகப் பிரிந்து பல கிராமங்கள் வழியாக சென்று மீண்டும் பாலாற்றில் கலக்கிறது. இந்த வெள்ளப்பெருக்கால் கடந்த 5 நாட்களுக்கு மேலாக குடியாத்தம் அடுத்த ஒலக்காசி, சித்தாத்தூர், ஆலாம்பட்டரை, ஏழரைதோப்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாதவாறு தீவு போல் அப்பகுதி துண்டிக்கப்பட்டது.
அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களான பால் உள்ளிட்டவை கயிறு கட்டி அதன் மூலம் அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மூலமாக ரப்பர் படகு மூலம் கிராமங்களுக்கு மருத்துவ பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
துண்டிக்கப்பட்ட நான்கு கிராமங்களுக்கு செல்ல உடனடியாக மாற்று ஏற்பாடு செய்து தரும்படி குடியாத்தம் ஒன்றியக் குழு தலைவர் என்.இ.சத்யானந்தம், மேல் ஆலத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சுஜாதாராஜ்குமார், ஒலக்காசி ஊராட்சி மன்ற தலைவர் சூர்யாமோகன் குமார் உள்ளிட்டோர் கலெக்டர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
இரும்பு பாலம் அமைப்பு
தொடர்ந்து வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இப்பகுதியில் உடனடியாக பாலம் அமைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி மேற்பார்வையில் ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் செந்தில்குமரன், குடியாத்தம் உதவி கலெக்டர் தனஞ்செயன், தாசில்தார் லலிதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் யுவராஜ், சாந்தி, ஒன்றிய பொறியாளர்கள் குகன், சிலம்பரசன், ஊரக வளர்ச்சி மற்றும் வருவாய்த் துறையினர் குடியாத்தம் அடுத்த நத்தமேடு மற்றும் ஆலாம்பட்டரை இடையே இரும்பு பாலம் அமைக்கும் பணியை நேற்று தொடங்கினர்.
இரு கரைகளிளும் நூற்றுக்கணக்கான மணல் மூட்டைகள் அடுக்கி அதன் பின்னர் சுமார் 4 அடி அகலத்தில் நாற்பது அடி நீளத்திற்கு இரும்பு பாலம் அமைத்தனர். அதைத் தொடர்ந்து 5 நாட்களுக்கு பிறகு நான்கு கிராமத்தை சேர்ந்த மக்கள் ஆலாம்பட்டரை கிராமத்தில் இருந்து நத்தமேடு வழியாக வந்தனர். அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்த மாவட்ட நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை, வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.
Related Tags :
Next Story