குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்


குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 23 Nov 2021 11:12 PM IST (Updated: 23 Nov 2021 11:12 PM IST)
t-max-icont-min-icon

வேட்டவலம் அருகே குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வேட்டவலம்

வேட்டவலம் அருகே குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

 மின்மோட்டார்கள் பழுது

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தை அடுத்த வைப்பூர் கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். 

இந்த கிராமத்திற்கு, விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றில் உள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து குடிநீர் வந்து கொண்டிருந்தது. 

இந்த நிலையில் சமீபத்தில் பெய்த கனமழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து ஆழ்துளை கிணறு நிரம்பி அதன் மீது வெள்ளம் சென்றதால் மின்மோட்டார்கள் பழுதடைந்து உள்ளது. 

இதனால் கிராமத்திற்கு கடந்த சில நாட்களாக குடிநீர் வருவதில்லை. மேலும் கிராமத்தில் உள்ள 30-க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் பழுதடைந்து சரி செய்யாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் குடிநீருக்காக  அவதிப்பட்டு வருகின்றனர். 

 சாலை மறியல்

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் குடிநீர் வழங்கக்கோரி திருக்கோவிலூர்-வேட்டவலம் சாலையில் வந்த அரசு பஸ்சை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஊராட்சி மன்ற தலைவர் மீனாட்சி சம்பத் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

அதைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். அதைத் தொடர்ந்து கீழ்பென்னாத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பத் அந்த கிராமத்திற்கு சென்று ஆழ்துளை கிணற்றில் புதிய மின்மோட்டார்கள் பொருத்தும் பணியையும், பழுதடைந்த மின்மோட்டார்களை சரி செய்யும் பணியையும் பார்வையிட்டார். 

அப்போது உதவி பொறியாளர் ஜெயப்பிரகாஷ், ஊராட்சி செயலாளர் ரமேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story