கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்
ரெட்டிபாளையம் ஏரிக்கு வரும் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
கண்ணமங்கலம்
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள ரெட்டிபாளையம் கிராமத்தில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு வரும் நீர்வரத்து கால்வாய் கல்பட்டு ஊத்துக்குட்டம்மன் மலையில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் கால்வாய் வரும் இரும்பிலி மலையடிவாரத்தில் ஆக்கிரமிப்பு செய்து நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் பெய்த மழையில் இந்த கால்வாயில் வந்த தண்ணீர் பெரிய ஏரிக்கு வராமல் தடைபட்டது. இதனால் பெரிய ஏரி நிரம்பாமல் இருந்தது.
இந்த நிலையில் தம்டகோடி மலையில் இருந்து வேறு கால்வாய் வழியாக தண்ணீர் வரத்து ஏற்பட்டது. இதனால் சுமார் 21 ஆண்டுகளுக்கு பின்னர் பெரிய ஏரி நிரம்பி வழிகிறது.
எனவே, கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி காட்டுக்காநல்லூர், ரெட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று ஆக்கிரமிப்பு நிலத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் ரெட்டிபாளையம் பெரிய ஏரிக்கு தண்ணீர் வரத்து கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முன்னதாக ரெட்டிபாளையம் பெரிய ஏரிக்கு சிறப்பு பூஜை செய்து ஆடு பலியிட்டு, உபரிநீரை பொதுமக்கள் திறந்து விட்டனர்.
இதில், ஊராட்சி மன்ற தலைவர் ரேணு, கிராம நிர்வாக அலுவலர் பொற்கொடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story