குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை மாவட்ட நிர்வாகத்தின் உதவியை எவ்வித தயக்கமின்றி தொடர்பு கொள்ளலாம் விழுப்புரம் கலெக்டர் டி மோகன் தகவல்
விழுப்புரம் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை நடக்க நேரிட்டால் மாவட்ட நிர்வாகத்தின் உதவியை எவ்வித தயக்கமின்றி உடனே தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் டிமோகன் தெரிவித்துள்ளார்
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் டி.மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்முறையால் பெண் மற்றும் ஆண் குழந்தைகள் பாதிக்கப்படுவது மனவேதனைக்குரியதாகும். பாலியல் வன்முறையை செய்யக்கூடிய நபரே தவறு இழைத்தவர்கள் மற்றும் தண்டனைக்குரியவர்கள் ஆவர். அவர்களே பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்படி குற்றவாளிகள் என்பதை நாம் அனைவரும் அறிய வேண்டும். ஆகவே பாதிப்புக்குள்ளான பெண் குழந்தைகள், எந்த விதத்திலும் தங்களுக்குள் குற்ற உணர்வினை ஏற்படுத்திக்கொள்ள தேவையில்லை.
குழந்தைகளிடம் யாரேனும் பாலியல் ரீதியாக பேசுதல், ஆபாச படம் காட்டுதல், பாலியல் சீண்டல் நிகழ்வதை அறிந்தால் அச்சப்படவோ, மனவேதனையடைந்து உங்களை நீங்களே தனிமைப்படுத்திக்கொள்ளவோ அல்லது தற்கொலை என்ற தவறான முடிவுக்கோ செல்ல வேண்டிய அவசியமில்லை. உங்களது பெற்றோர் அல்லது நம்பிக்கைக்கு உரியவரிடமோ தெரியப்படுத்தி அவர்களது உதவியை நாடுங்கள். உங்கள் ரகசியத்தை பாதுகாக்கக்கூடிய நபராக அந்த நபர் இருக்க வேண்டும் என்பது முக்கியம். உங்களுக்கு தேவையான சரியான ஆலோசனை மற்றும் முதலுதவி மட்டுமே என்ன என்பதை நீங்கள் உணர வேண்டும்.
மாவட்ட நிர்வாகத்தின் உதவியை நாடுங்கள்
மேலும் பாலியல் வன்கொடுமை நடக்க நேரிட்டால் மாவட்ட கலெக்டர் அல்லது மாவட்ட நிர்வாகத்தின் உதவியை எவ்வித தயக்கமும் இன்றி உடனே தொடர்பு கொள்ளலாம். இதற்கென உங்களுக்கென்றே உருவாக்கப்பட்ட இலவச அவசர தொலைபேசி எண் 1098 என்ற எண்ணை தொடர்பு கொண்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பாதுகாப்பும், ஆலோசனையும் வழங்க நாங்கள் காத்திருக்கிறோம். நீங்கள் 1098 என்ற எண்ணுக்கு தகவல் அளிக்கும்போது உங்கள் ரகசியம் பாதுகாக்கப்படும். எக்காரணத்தை கொண்டும் உங்களை பற்றிய விவரங்கள் யாரிடமும் பகிரப்பட மாட்டாது. எங்களோடு பேச விரும்பினால் 99443 81887 என்ற எண்ணின் வாட்ஸ்-அப் வாயிலாக ஹாய் என்ற குறுஞ்செய்தியை மட்டுமே அனுப்பினால் போதுமானது. நாங்களே உங்களை தொடர்பு கொண்டு உங்கள் தேவையை அறிந்து உதவி செய்கிறோம்.
மேலும் உங்களிடம் தொலைபேசி இல்லாத நிலையில் அஞ்சலக அட்டையில் முகவரியை குறிப்பிட்டு உதவி தேவை என்ற வாசகத்துடன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், 156, சாரதாம்பாள் தெரு, நித்தியானந்தம் நகர், வழுதரெட்டி, விழுப்புரம்- 605 401 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். விழுப்புரம் மாவட்டத்தில் உங்களுக்காக விரைந்து வந்து உதவி செய்ய நானும், குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்புத்துறையை சேர்ந்த அதிகாரிகளும் தயாராக இருக்கிறோம். நாம் அனைவரும் இணைந்து செயல்பட்டு விழுப்புரத்தை குழந்தைகளுக்கான பாதுகாப்பு மிகுந்த மாவட்டமாக்க உறுதி செய்திடுவோம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story