வேட்டாம்பாடியில் கூட்டுறவு சங்கத்தை விவசாயிகள் முற்றுகை
வேட்டாம்பாடியில் கூட்டுறவு சங்கத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
நாமக்கல்:
நாமக்கல் அருகே உள்ள வேட்டாம்பாடியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தை விவசாயிகள் சிலர் நேற்று திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நகைக்கடன் மற்றும் பயிர்க்கடன்களுக்கான அரசாணையை வெளியிட வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதுகுறித்து அந்த பகுதி விவசாயிகள் கூறியதாவது:-
வேட்டாம்பாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் சுமார் 2,700-க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களில் சுமார் 600-க்கும் மேற்பட்டோர் பயிர்க்கடன்களும், 150-க்கும் மேற்பட்டோர் நகைக்கடன்களும் கடந்த ஆட்சி காலத்தில் பெற்றோம். நகைக்கடன் மற்றும் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்து அதற்கான அரசாணையையும் அ.தி.மு.க. அரசு வெளியிட்டு இருந்தது. அதற்கான சான்றிதழை எடுத்து சென்று கூட்டுறவு சங்க அதிகாரிகளிடம் முறையிட்டால் தங்களுக்கு இன்னும் அரசாணை வரவில்லை என கூறி காலம் தாழ்த்தி வருகின்றனர்.
தற்போது மழை பெய்து விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்ததால் எங்களின் வாழ்வாதாரம் பாதிப்படைந்து உள்ளது. எனவே தற்போதுள்ள அரசு கடந்த ஆட்சி காலத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட பயிர்க்கடன் மற்றும் நகைக்கடன்களுக்கான அரசாணைகளை உடனடியாக வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story