பாலியல் தொல்லையால் கரூர் மாணவி தற்கொலை: குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
பாலியல் தொல்லையால் கரூர் மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர்,
ஆர்ப்பாட்டம்
பாலியல் தொல்லையால் கரூரில் 17 வயதான பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கண்டறிந்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பஸ் நிலையம் அருகே உள்ள கோவை ரோட்டில் கல்லூரி மாணவ-மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு புரட்சிகர இளைஞர் மாணவர் முன்னணி அமைப்பின் மாநில பொருளாளர் சுரேந்திரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கல்லூரி மாணவ-மாணவிகள் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்த டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தூர் பாண்டியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் மாணவர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீஸ் துணை சூப்பிரண்டு தேவராஜ் மற்றும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் அசோக்குமார், கண்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவி கொலை வழக்கில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் விரைவில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படும் என உறுதி அளித்தனர். இதில் சமாதானம் அடைந்த மாணவ-மாணவிகள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story