கொள்ளிடம் ஆற்றில் சிக்கிய 68 மாடுகள் மீட்பு


கொள்ளிடம் ஆற்றில் சிக்கிய 68 மாடுகள் மீட்பு
x
தினத்தந்தி 23 Nov 2021 7:31 PM GMT (Updated: 23 Nov 2021 7:31 PM GMT)

கொள்ளிடம் ஆற்றில் சிக்கிய 68 மாடுகள் மீட்கப்பட்டன.

தா.பழூர்:

ஆற்றின் நடுவில் சிக்கிய மாடுகள்
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடாலிகருப்பூர் கிராமத்தை சேர்ந்த சில விவசாயிகளின் மாடுகள் கொள்ளிடம் ஆற்றின் நடுப்பகுதிக்கு சென்று மேய்ச்சலில் ஈடுபட்டு திரும்புவது வழக்கம். அதன்படி ஆற்றின் நடுத்திட்டு பகுதிக்கு மாடுகள் மேய்ச்சலுக்கு சென்றன. இந்நிலையில் கொள்ளிடம் ஆற்றுக்கு காவிரி ஆற்றில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் ஆற்றில் தண்ணீரின் அளவு வழக்கத்தைவிட அதிகமாக உள்ளது. இதனால் மாடுகள் கரைக்கு திரும்பவில்லை.
இதையடுத்து விவசாயிகள் கொடுத்த தகவலின்பேரில் நேற்று முன்தினம் அங்கு வந்த ஜெயங்கொண்டம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய அதிகாரி மோகன்ராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மிதவை படகு மூலம் மாட்டின் உரிமையாளர்களை நடுத்திட்டு பகுதிக்கு அழைத்து சென்றனர். மேலும் அங்கிருந்து கரைப் பகுதியை நோக்கி மாடுகளை விரட்டினர். ஆனால் தண்ணீர் அதிக அளவு சென்றதால் மாடுகள் மீண்டும் நடுத்திட்டு பகுதிக்கே திரும்புவதற்கு முயற்சித்தன. இதனால் அவற்றை மீட்க முடியவில்லை.
மாட்டை அணைத்தவாறு...
இதைத்தொடர்ந்து நேற்று காலை 8 மணிக்கு பெரம்பலூர், அரியலூர் ஒருங்கிணைந்த மாவட்ட தீத்தடுப்பு மற்றும் மீட்பு பணிகள் அதிகாரி அம்பிகா தலைமையில் ஆற்றின் கரையில் இருந்து நடுத்திட்டு பகுதிக்கு மிதவை படகு மூலம் தீயணைப்பு வீரர்கள் மற்றும் விவசாயிகள் கொண்ட 50 பேர் அடங்கிய குழுவினர் சென்றனர். அவர்கள், மாடுகளை மீண்டும் தண்ணீரில் இறக்கி கோடாலிகருப்பூர் கரைக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் மாடுகள் மீண்டும் நடுத்திட்டு பகுதிக்கு சென்றன.
இதையடுத்து தீயணைப்பு வீரர் முத்துகுமார், ஒரு மாட்டை தன்னோடு அணைத்தவாறு தண்ணீருக்குள் இறங்கி நீச்சல் அடித்து கோடாலிகருப்பூர் கரையை நோக்கி வரத் தொடங்கினார். அந்த மாட்டை தொடர்ந்து ேமலும் சில மாடுகள் வரத் தொடங்கின. தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் முதலில் சென்ற மாடு சோர்ந்து விடாமல் இருக்க தீயணைப்பு வீரர் முத்துக்குமார் அந்த மாட்டை தட்டிக்கொடுத்து கரையை நோக்கி அழைத்து வந்தார். முதல் கட்டமாக 28 மாடுகள் கரைக்கு வந்து சேர்ந்தன.
மாடுகள் மீட்பு
இதைப் பார்த்த சில மாட்டு உரிமையாளர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மாடுகளை அணைத்தவாறு தண்ணீருக்குள் இறங்கி மாடுகளை கரைக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டனர். இரண்டாவது கட்டமாக 37 மாடுகள் கரை சேர்ந்தன. முடிவில் மீதமிருந்த 3 மாடுகளையும் மிகக் கடுமையான முயற்சிக்குப் பிறகு தீயணைப்பு வீரர்கள் கரை சேர்த்தனர்.
இதையடுத்து மாடுகளை கரை சேர்த்த தீயணைப்பு வீரர் முத்துக்குமார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், உதவிக்கு வந்த விவசாயிகள், அவர்களை சரியாக வழிநடத்திய அதிகாரி அம்பிகா ஆகியோரை பொதுமக்கள் பாராட்டினர். மீட்புக்குழுவினருக்கான உதவிகளை ஊராட்சி தலைவர் இளங்கோவன் செய்தார். தீயணைப்பு வீரர்களுக்கு மாடுகளின் உரிமையாளர்கள் நன்றி தெரிவித்தனர்.

Next Story