ஆக்கிரமிப்புகள் அகற்றம்


ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 24 Nov 2021 1:01 AM IST (Updated: 24 Nov 2021 1:01 AM IST)
t-max-icont-min-icon

ஆண்டிமடம் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதை ஏற்படுத்தப்பட்டது.

ஆண்டிமடம்:
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் தாலுகா ராங்கியம் கிராமம் அண்ணா நகரில் இருளர் இன மக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஆண்டிமடம்-விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து செல்லும் பாதையில் விவசாய நிலம் வைத்திருப்பவர்கள் சாகுபடி செய்யும்போது குறுக்கே கள்ளிவேலி வைத்து அடைத்து விடுவதால் இருளர் பழங்குடியினர் இனத்தை சேர்ந்த குடியிருப்புவாசிகளான மாணவர்கள், முதியோர், நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் அந்த சாலைக்கு செல்ல முடியாமல் பல ஆண்டுகளாக மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.
இதனால் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து சிலுவைச்சேரி கிராமம் வழியாக சுற்றி செல்லும் நிலை இருந்தது. இது குறித்து அரசு அதிகாரிகளிடம் மனு அளித்தும், பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில் தற்போது பருவமழை காரணமாக அனைத்து பகுதிகளிலும் நீர் சூழ்ந்துள்ள நிலையில் பாதை வசதி இல்லாமல் மிகவும் சிரமத்திற்குள்ளாகினர். இதனால் தங்களுக்கு முறையான பாதை வசதி செய்து தரக்கோரி மாவட்ட கலெக்டருக்கு மனு அளித்தனர். இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் உத்தரவிட்டார்.
அதன்பேரில் உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் அமர்நாத் பரிந்துரையின்பேரில் ஆண்டிமடம் தாசில்தார் முத்துகிருஷ்ணன் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவாஜி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மேரி, வருவாய் ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், கிராம நிர்வாக அலுவலர் மணிவண்ணன் ஆகியோர் கொண்ட குழுவினர் அப்பகுதிக்கு சென்று ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதில் இருளரின மக்கள் குடியிருப்பு பகுதிக்கு செல்லும் முகப்பு பாதையான ராங்கியம் அண்ணாநகர் செல்ல பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுப் பாதையாக பயன்படுத்தும் வகையில் அளந்து, அத்துகல் நடப்பட்டு பாதை ஏற்படுத்தப்பட்டது. இந்த பணியையொட்டி ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜன் உத்தரவின்பேரில் ஆண்டிமடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் நடேசன், பன்னீர்செல்வம் தலைமையிலான ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் இருளர் பழங்குடியின மக்கள் மகிழ்ச்சியடைந்து மாவட்ட கலெக்டருக்கும், அரசு துறை சார்ந்த அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.

Next Story