வரத்து குறைவால் காய்கறிகள் விலை கடும் உயர்வு-தக்காளி கிேலா ரூ.150-க்கு விற்பனை


வரத்து குறைவால் காய்கறிகள் விலை கடும் உயர்வு-தக்காளி கிேலா ரூ.150-க்கு விற்பனை
x
தினத்தந்தி 24 Nov 2021 1:13 AM IST (Updated: 24 Nov 2021 1:13 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் வரத்து குறைவால் காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது. தக்காளி கிலோ ரூ.150-க்கு விற்பனையானது.

சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில்  தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் வரத்து குறைவால் காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது. தக்காளி கிலோ ரூ.150-க்கு விற்பனையானது.
காய்கறிகள் விலை உயர்வு
சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, திருப்புவனம், சிங்கம்புணரி, காரைக்குடி சுற்று வட்டார பகுதி, மானாமதுரை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை பயிரிட்டு அவற்றை சந்தைகளில் விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, சிவகங்கை, திருப்புவனம், தேவ கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த சில தினங்காக 3 முதல் நான்கு மடங்கு வரை காய்கறிகள் விலை உயர்ந்துள்ளதால் ஏழை, எளிய பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
 இதுதவிர சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் உள்ள வாரச்சந்தை, தினசரி சந்தை உள்ளிட்ட பகுதிகளுக்கு திண்டுக்கல், ஓட்டன்சத்திரம், மதுரை உள்ளிட்ட பகுதியில் இருந்து அதிக அளவில் காய்கறிகள் வந்து இறங்கும். ஆனால் தற்போது தொடர் மழை காரணமாக போதியளவில் காய்கறிகள் வரத்து இல்லாததாலும் இந்த விலை உயர்விற்கு காரணமாக உள்ளதாக தெரிகிறது. கடந்த சில தினங்களாக சிவகங்கை மாவட்டத்தில் கத்திரிக்காய் கிலோ ரூ.150, தக்காளி ரூ.150, அவரை ரூ.80, பீன்ஸ் ரூ.100, வெண்டைக்காய் ரூ.100, காலி பிளவர், முட்டை கோஸ், சேனை மற்றும் கருணை, பாகற்காய் ஆகியவை ரூ.80, பீட் ரூட் ரூ.60, உருளை ரூ.50 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
நடவடிக்கை வேண்டும்
இந்த விலை கடந்த மாதத்தை காட்டிலும் 3 முதல் 4 மடங்கு வரை அதிகமாக உள்ளது. இதனால் தினந்தோறும் சமைக்கும் உணவில் காய்கறிகளை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 
இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறியதாவது, பொதுவாக காய்கறிகள் கடுமையான வறட்சி காலம் மற்றும் போதிய அளவில் விளைச்சல் இல்லாத காலங்களில் விலை உயர்வு அதிகரிப்பது வழக்கம். ஆனால் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதையொட்டி பல்வேறு இடங்களில் நல்ல முறையில் காய்கறிகள் உற்பத்தி செய்யப்பட்டிருப்பினும் கூட தற்போது விலை உயர்வு அதிகரிப்பு என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து காய்கறி வியாபாரிகளிடம் கேட்டால் பல்வேறு இடங்களில் தொடர் மழை காரணமாக போதியளவில் காய்கறி விளைச்சல் இல்லை. இன்னும் சில இடங்களில் தொடர்ந்து பெய்த மழை காரணமாக அங்கிருந்து கொண்டு வரமுடியவில்லை. இதன் காரணமாக விலை உயர்வு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கின்றனர். எனவே அன்றாடம் ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் காய்கறி விலையை கட்டுக்குள் கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Next Story