பா.ஜனதாவில் சேர புனித் ராஜ்குமாருக்கு, மோடி அழைப்பு விடுத்தாரா?


பா.ஜனதாவில் சேர புனித் ராஜ்குமாருக்கு, மோடி அழைப்பு விடுத்தாரா?
x
தினத்தந்தி 23 Nov 2021 8:56 PM GMT (Updated: 23 Nov 2021 8:56 PM GMT)

பெங்களூருவில் சந்தித்தபோது பா.ஜனதாவில் சேரும்படி நடிகர் புனித் ராஜ்குமாருக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தாரா? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெங்களூரு:

அரசியலில் ஆர்வம் இல்லை

  நடிகர் புனித் ராஜ்குமார் கடந்த அக்டோபர் மாதம் 29-ந் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு, அவரை பா.ஜனதாவில் சேர்க்க அக்கட்சி தலைவர்கள் முயற்சி செய்த தகவல் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து புனித் ராஜ்குமாரின் மேலாளர் வஜ்ரேஸ்வர்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

  கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு பா.ஜனதா தலைவர்கள் சிலர், நடிகர் புனித் ராஜ்குமாரை நேரில் சந்தித்து பா.ஜனதாவில் சேரும்படி அழைப்பு விடுத்தனர். அதற்கு அவர், எனக்கு அரசியலில் ஆர்வம் இல்லை. அனைத்து கட்சிகளிலும் எனக்கு நண்பர்கள் உள்ளனர். அதனால் எனது தந்தை வழியில் பயணிக்கவே விரும்புகிறேன் என்று கூறிவிட்டார். பிரதமர் மோடியை பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்தில் நடிகர் புனித் ராஜ்குமார் தனது மனைவியுடன் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 7 நிமிடங்கள் நீடித்தன.

திரைத்துறையில் பயணிக்கவே...

  அப்போது மோடி, உங்களை போன்ற இளைஞர்களின் சேவை நாட்டிற்கு தேவை என்று கூறினார். அதற்கு அவர், எனக்கு அரசியலில் ஈடுபாடு இல்லை. எனது தந்தை வழியில் திரைத்துறையில் பயணிக்கவே விரும்புகிறேன் என்று கூறிவிட்டார். ஆனால் பிரதமர், புனித் ராஜ்குமாரிடம் பா.ஜனதாவுக்கு வரும்படி நேரடியாக அழைக்கவில்லை. அதற்கு முன்பு புனித் ராஜ்குமாரை பா.ஜனதா தலைவர்கள் ஆந்திராவை சேர்ந்த சோமவீர்ராஜ், பி.பி.சர்மா ஆகியோர் சந்தித்து பேசினர்.
  இவ்வாறு வஜ்ரேஸ்வர்குமார் கூறினார்.

  கன்னட திரைப்பட இயக்குனர் பாபு என்பவர் கூறுகையில், ‘‘பா.ஜனதா தலைவர்கள், நடிகர் புனித் ராஜ்குமாரை சந்தித்து, பிரதமர் மோடியை சந்திக்குமாறு கேட்டனர். அவ்வாறு நான் சந்தித்தால் அதற்கு அரசியல் சாயம் பூசப்படும் என்று கூறி அவர் மறுத்தார். அதற்கு அந்த தலைவர்கள், பா.ஜனதா தலைவராக அவரை சந்திக்க வேண்டாம் என்றும், ஒரு பிரதமரைபோல் அவரை சந்திக்குமாறும் கேட்டுக் கொண்டனர். அப்போதும் அவர் அதை ஏற்க மறுத்தார். பிறகு அவரது மனைவி அஸ்வினி கூறியதை அடுத்து பிரதமரை சந்திக்க ஒப்புக்கொண்டார்’’ என்றார்.

தீர்க்கமான முடிவு

  காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், தமது கட்சியில் சேரும்படி புனித் ராஜ்குமாருக்கு பல முறை அழைப்பு விடுத்தார். அவர் அதை தீர்க்கமான முடிவுடன் நிராகரித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story