மாவட்ட செய்திகள்

கடைகளில் மின் இணைப்பு துண்டிப்பு + "||" + electric connection cut for shops

கடைகளில் மின் இணைப்பு துண்டிப்பு

கடைகளில் மின் இணைப்பு துண்டிப்பு
தஞ்சை மாநகரில் 54 கடைகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதுடன், பொருட்களை எடுத்து செல்ல 2 நாட்கள் காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்;
தஞ்சை மாநகரில் 54 கடைகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதுடன், பொருட்களை எடுத்து செல்ல 2 நாட்கள் காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
54 கடைகள்
தஞ்சை அண்ணா சிலையில் இருந்து பனகல் கட்டிடம் செல்லக்கூடிய சாலையோரத்தில் செல்போன் கடைகள், துணிக்கடைகள், செல்போன் பழுது பார்க்கும் கடைகள், டீக்கடைகள், செருப்பு கடைகள் என 54 கடைகள் உள்ளன. மழைநீர் வடிகால் மீது இந்த கடைகள் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கடைகளை அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
மேலும் இந்த கடைகள் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் மழைநீர் வடிகால் கட்டவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக கடைகளை காலி செய்ய மாநகராட்சி வலியுறுத்தியது. இந்த நிலையில் கடந்த 8-ந்தேதி கடைகளை காலி செய்ய மாநகராட்சி அதிகாரிகள் பொக்லின் எந்திரத்தோடு அங்கு சென்றனர். அப்போது அங்கிருந்த வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் கடைகள் இடிக்கப்படவில்லை.
தீக்குளிக்க முயற்சி
கடந்த வாரம் மின் இணைப்பை துண்டிக்க அதிகாரிகள் சென்றதால் வியாபாரிகள், தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒரு வியாபாரி தீக்குளிக்க முயன்றதால் மின் இணைப்பு துண்டிக்கும் முயற்சியை அதிகாரிகள் கைவிட்டனர். நேற்றுகாலை மீண்டும் மின் இணைப்பை துண்டிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் கடைகள் எல்லாவற்றையும் அடைத்தனர்.
பின்னர் சாலையோரத்தில் வியாபாரிகள், தொழிலாளர்கள் என ஏராளமானோர் திரண்டு நின்றனர். துணை போலீஸ் சூப்பிரண்டு கபிலன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ஸ்ரீதர், சந்திரா மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் ராஜசேகரன், இளநிலை பொறியாளர்கள் கண்ணதாசன், ஆறுமுகம், உதவி வருவாய் அலுவலர்கள் சங்கரவடிவேல், அசோகன் ஆகியோர் பிற்பகல் 1 மணி அளவில் வந்தனர்.
மின் இணைப்பு துண்டிப்பு
பின்னர் பிற்பகல் 1.25 மணி அளவில் மின் ஊழியர்கள் மின் கம்பங்களில் ஏறி கடைகளுக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பை துண்டித்தனர். மொத்தம் 6 மின் கம்பங்களில் இருந்து 54 கடைகளுக்கும் வழங்கப்பட்ட மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
இதையடுத்து 2 பொக்லின் எந்திரங்கள் வரவழைக்கப்பட்டதால் இன்றைக்கே (நேற்று) கடைகள் அகற்றும் பணி தொடங்கப்படுமோ? என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மின் இணைப்புகளை மட்டும் துண்டித்துவிட்டு மின் ஊழியர்கள், மாநகராட்சி அதிகாரிகள் அங்கிருந்து கிளம்பி சென்றனர். பின்னர் பொக்லின் எந்திரங்களும் அங்கிருந்து வேறொரு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.