ஆந்திரா கர்நாடகாவில் கனமழை மார்க்கண்டேய நதியில் வெள்ளப்பெருக்கு
ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் பெய்த கனமழை காரணமாக மார்க்கண்டேய நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வேப்பனப்பள்ளி:
ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் பெய்த கனமழை காரணமாக மார்க்கண்டேய நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கனமழை
ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலத்தில் கனமழை பெய்தது. கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக கோலார் மாவட்டம் பூதிகோட்டை மற்றும் காமசமுத்திரம் அணைகள் நிரம்பின. இதனால் அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கர்நாடக-தமிழக எல்லையில் உள்ள மார்க்கண்டேய நதியில் வந்து கொண்டிருக்கிறது.
இதனால் மார்க்கண்டேய நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக யார்கோல் அணை 100 அடியை எட்டி உள்ளது. மேலும் கனமழையால் நீர்வரத்து அதிகரித்து வருவதால் இன்னும் சில தினங்களில் யார்கோல் அணை முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மார்க்கண்டேயன் நதியின் கிளை நதிகளான குப்தா ஆற்றிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
ஆந்திரா ஏரி நிரம்பியது
இதேபோன்று தமிழக-ஆந்திர மாநில எல்லையில் வேப்பனப்பள்ளி அருகே ஆந்திரா ஏரி உள்ளது. இந்த ஏரி வேப்பனப்பள்ளி ஆற்றின் முக்கிய நீர்வரத்து ஆக இருந்து வருகிறது. தற்போது ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இந்த ஏரிக்கு தண்ணீர் பெருக்கெடுத்து வருகிறது.
இந்த ஏரியில் இருந்து வரும் தண்ணீரானது தமிழகத்தில் நுழைந்து பல கிராமங்கள் வழியாக மார்க்கண்டேய நதியில் கலக்கிறது. ஆந்திரா ஏரி நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது. மார்க்கண்டேய நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஏராளமான பொதுமக்கள் பார்த்து செல்கின்றனர்.
Related Tags :
Next Story