வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க ரூ.2,700 லஞ்சம் வாங்கிய மின்வாரிய என்ஜினீயருக்கு 3 ஆண்டு சிறை


வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க ரூ.2,700 லஞ்சம் வாங்கிய மின்வாரிய என்ஜினீயருக்கு 3 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 24 Nov 2021 6:31 AM GMT (Updated: 24 Nov 2021 6:31 AM GMT)

வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க ரூ.2,700 லஞ்சம் வாங்கிய மின்வாரிய என்ஜினீயருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவள்ளூர் சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

சென்னை,

சென்னை தண்டையார்பேட்டையை அடுத்த வல்லூர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சுந்தரம். இவர், தனது வீட்டுக்கு மின் இணைப்பு பெறுவதற்காக தண்டையார்பேட்டையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார். வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என்றால் தனக்கு லஞ்சமாக ரூ.2,700 தரவேண்டும் என்று மின்வாரிய இளநிலை என்ஜினீயர் கணேஷ் (வயது 57) கூறினார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத சுந்தரம், இது குறித்து சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார். 

பின்னர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அளித்த அறிவுரையின்படி கடந்த 29-5-2014 அன்று ரசாயன பொடி தடவிய ரூ.2,700-ஐ சுந்தரம் லஞ்சமாக கொடுத்தபோது அவரிடம் இருந்து பணத்தை வாங்கிய இளநிலை என்ஜினீயர் கணேசை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். 

இது தொடர்பான வழக்கு திருவள்ளூரில் உள்ள சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த திருவள்ளூர் சிறப்பு கோர்ட்டு நீதிபதி வேலரஸ் நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில் லஞ்சம் வாங்கியது உறுதியானதால் கணேசுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். 

அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசுத்துறை சிறப்பு கூடுதல் வக்கீலாக அமுதா வாதாடினார்.

Next Story