வீடு புகுந்து வாலிபர் மீது தாக்குதல் பா.ஜ.க. நிர்வாகியிடம் போலீஸ் விசாரணை
வீடு புகுந்து வாலிபர் மீது தாக்குதல் குறித்து போலீஸ்சார் பா.ஜ.க. நிர்வாகியிடம் விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். அங்கு அவரை தரையில் உட்கார சொன்னதாக பா.ஜ.க.வினர், போலீஸ் நிலையம் முன்பு கோஷமிட்டபடி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆலந்தூர்,
சென்னை வேளச்சேரி லட்சுமி நகரை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 35). இவருடைய மனைவி ஹேமலதா (27). இவர், நேற்றுமுன்தினம் தனது தோழி ஹரிணியுடன் தியேட்டருக்கு படம் பார்க்க சென்றார். அப்போது வினோத்குமார் தனது மனைவி ஹேமலதாவை செல்போனில் தொடர்பு கொண்டார். செல்போனை ஹேமலதாவின் தோழி ஹரிணி எடுத்து பேசினார். அதற்கு வினோத்குமார், தனது மனைவியிடம் செல்போனை கொடுக்கும்படி கூறினார். அப்போது இருவருக்கும் போனிலேயே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த வினோத், செல்போனிலேயே ஹரிணியை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.
இது குறித்து ஹரிணி, தனது நண்பரும் பெருங்குடி பா.ஜ.க. இளைஞரணி நிர்வாகியுமான ராஜேஷிடம் (35) கூறினார். உடனே அவர், தனது நண்பர்களுடன் வினோத்குமார் வீட்டுக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த வினோத், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்த புகாரின்பேரில் வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து பா.ஜ.க. நிர்வாகி ராஜேசை விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். அங்கு அவரை தரையில் உட்கார சொன்னதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பா.ஜ.க.வினர், போலீஸ் நிலையம் முன்பு கோஷமிட்டபடி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கலைந்து போக செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story