மாவட்ட செய்திகள்

வெள்ளம் புகுந்ததால் பள்ளி வகுப்பறைக்குள் பள்ளம் + "||" + Ditch inside the school classroom due to flooding

வெள்ளம் புகுந்ததால் பள்ளி வகுப்பறைக்குள் பள்ளம்

வெள்ளம் புகுந்ததால் பள்ளி வகுப்பறைக்குள் பள்ளம்
பள்ளிப்பட்டு அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆற்று வெள்ளம் புகுந்ததால் வகுப்பறைக்குள் பள்ளம் ஏற்பட்டது.
சென்னை,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா சொரக்காய்பேட்டை கிராமத்தில் அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு மிக அருகில் கொசஸ்தலை ஆறு ஓடுகிறது. சமீபத்தில் பெய்த பெருமழையால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் பள்ளிப்பட்டு அருகே கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

இந்த வெள்ளம் சொரக்காய்பேட்டை கிராமத்தில் இருக்கும் அரசு மேல்நிலைப்பள்ளிக்குள் புகுந்தது. இதனால் பள்ளியில் உள்ள பிளஸ்-2 மாணவர்களுக்கான வகுப்பறை கட்டிடம் சேதம் அடைந்தது. வகுப்பறையின் உள்ளே ஒரு பகுதியில் மண்அரிப்பால் பெரிய பள்ளம் ஏற்பட்டது. மேலும் 225 மீட்டர் நீளம் கொண்ட பள்ளியின் சுற்றுச்சுவரும் இடிந்து விழுந்தது.

இதனால் அந்த வகுப்பறைக்குள் மாணவர்களை அனுமதிக்காமல் ஆசிரியர்கள் தடுத்து நிறுத்தினர். இது குறித்து தகவல் அறிந்ததும் திருத்தணி ஆர்.டி.ஓ. சத்யா நேற்று நேரில் சென்று அந்த பள்ளியை பார்வையிட்டார். சேதம் அடைந்த வகுப்பறை கட்டிடத்தை அவர் பொதுப்பணித்துறை என்ஜினீயர்களுடன் சென்று பார்வையிட்டு உடனடியாக செப்பனிட வேண்டும் என்று அறிவுறுத்தினார். வகுப்பறை கட்டிடத்தை இன்று (புதன்கிழமை) முதல் சீரமைத்து தருவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இடிந்து விழுந்த சுற்றுச்சுவரை புதிதாக கட்ட திட்டம் தயாரிக்கப்பட்டு மாவட்ட கலெக்டரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு அதன்பின் புதிதாக சுற்றுச்சுவர் கட்டி தருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.