பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் அமைச்சர் ஆய்வு


பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் அமைச்சர் ஆய்வு
x
தினத்தந்தி 24 Nov 2021 7:56 AM GMT (Updated: 24 Nov 2021 7:56 AM GMT)

பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.

பொன்னேரி,

பொன்னேரி அரசு ஆஸ்பத்திரி தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் அனுரத்னா. இவர் 3 மாத பயிற்சிக்கு அனுப்பப்பட்டார். அப்போது தலைமை மருத்துவ அதிகாரியாக அதே ஆஸ்பத்திரியில் பணியாற்றிய டாக்டர் விஜய்ஆனந்த் நியமிக்கப்பட்டு பணியாற்றி வந்தார். பயிற்சியை முடித்துவிட்டு வந்த டாக்டர் அனுரத்னாவுக்கு மீண்டும் தலைமை மருத்துவ அதிகாரியாக பணி வழங்கவில்லை என்று சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியதாக கூறப்படுகிறது.

இதை அறிந்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார்.

விசாரணையின் போது திருவள்ளூர் மாவட்ட இணை இயக்குனர் சாந்தி, பொன்னேரி அரசு ஆஸ்பத்திரி அதிகாரி (பொறுப்பு) விஜய்ஆனந்த் மற்றும் டாக்டர். அனுரத்னா ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றது. அப்போது திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பிஜான்வர்கீஸ், பொன்னேரி எம்.எல்.ஏ. துரைசந்திரசேகர், கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. கோவிந்தராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பொன்னேரி அரசு ஆஸ்பத்திரி டாக்டர் அனுரத்னா மாற்றப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வெளியான செய்தியால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விசாரணை நடத்த எனக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் நேரில் வந்து விசாரணை செய்தேன். பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் தலைமை மருத்துவ அதிகாரியாக டாக்டர் அனுரத்னா மீண்டும் செயல்படுவார். பொறுப்பு மருத்துவ அதிகாரி விஜய்ஆனந்த் அதற்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதி அளித்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story