மாவட்ட செய்திகள்

பள்ளிப்பட்டு அருகே ஆற்றில் மீன்பிடிக்க சென்ற வாலிபர் சாவு + "||" + Death of a young man who went fishing in the river near Pallipattu

பள்ளிப்பட்டு அருகே ஆற்றில் மீன்பிடிக்க சென்ற வாலிபர் சாவு

பள்ளிப்பட்டு அருகே ஆற்றில் மீன்பிடிக்க சென்ற வாலிபர் சாவு
பள்ளிப்பட்டு அருகே இரவில் ஆற்றில் மீன்பிடிக்க சென்ற வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா வெங்கட்ராஜ குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் பாலாஜி (வயது 22). இவர் சோளிங்கரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு 9½ மணியளவில் பாலாஜி சிலருடன் சேர்ந்து தனது கிராமத்திற்கு அருகில் ஓடும் லவா ஆற்றில் மீன் பிடிக்க சென்றார். அப்போது அந்த ஆற்றில் அதிக அளவு வெள்ளம் சென்றுகொண்டிருந்தது. அப்போது தவறி தண்ணீரில் விழுந்த அவர் மாயமானார்.

பதறிப்போன அவருடன் சென்றவர்கள் தங்களது கிராம மக்களுக்கும், பள்ளிப்பட்டு தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் தெரிவித்தனர். பாலாஜி ஆற்றில் விழுந்ததைக் கண்டு அவரை காப்பாற்ற முயன்ற திருநாதராஜபுரம் கிராமத்தை சேர்ந்த கோவிந்தசாமி (40) என்பவர் தண்ணீரில் அடித்து செல்ல அப்போது அங்கு இருந்தவர்கள் அவரை காப்பாற்றி கரை சேர்த்தனர். அவரை சிகிச்சைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இரவு நீண்ட நேரம் தேடியும் பாலாஜி கிடைக்கவில்லை.

இதனால் தீயணைப்பு வீரர்கள் திரும்பி சென்றனர். நேற்று காலை 10 மணிக்கு காணாமல் போன பாலாஜியின் உறவினர்கள் பள்ளிப்பட்டு - சோளிங்கர் சாலையில் கொசஸ்தலை ஆற்று பாலத்தின் மேல் திடீரென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காணாமல்போன பாலாஜியை கண்டுபிடித்து தரும்படி அவர்கள் கோரிக்கை எழுப்பினார். அப்போது அவர்களை பள்ளிப்பட்டு போலீசாரும், வருவாய்துறை அதிகாரிகளும், வருவாய் ஆய்வாளர் அபிராமி மற்றும் பலர் நீண்ட நேரம் சமாதானம் செய்து சாலை மறியலை கைவிடும்படி கூறினர். இருப்பினும் அவர்கள் சாலை மறியலை கைவிடாமல் தொடர்ந்தனர்.

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்த வழித்தடத்தில் வந்த பஸ்கள் நிறுத்தப்பட்டன.

தகவல் கிடைத்ததும் திருத்தணி ஆர்.டி.ஓ. சத்யா சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதைத்தொடர்ந்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதனால் அந்த பகுதியில் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் வெங்கட்ராஜ் குப்பம் கிராமம் அருகே இருந்த தடுப்பணை அருகே அவர் பிணமாக மீட்கப்பட்டார். இது குறித்து பள்ளிப்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.