தூத்துக்குடியில் ஆட்டோ டிரைவர் கொலையில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்
தூத்துக்குடியில் ஆட்டோ டிரைவர் கொலையில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் ஆட்டோ டிரைவர் கொலையில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். மகன் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சியில் அவரது தாய் பரிதாபமாக இறந்தார்.
ஆட்டோ டிரைவர் கொலை
தூத்துக்குடி செல்சீனி காலனி 2-வது தெருவை சேர்ந்தவர் கண்ணன் மகன் சாரதி என்ற பார்த்தசாரதி (வயது 35). ஆட்டோ டிரைவர். இவருடைய நண்பர் தூத்துக்குடி சக்திநகர் 2-வது தெருவைச் சேர்ந்த பால்ராஜ் (28). இவர் செல்சீனி காலனியை சேர்ந்த மாரிமுத்து மனைவி லட்சுமியுடன் ஏற்பட்ட பழக்கத்தால் அவரை அழைத்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த மாரிமுத்து, தனது மனைவி பால்ராஜூடன் சென்றதற்கு பார்த்தசாரதி உடந்தையாக இருந்ததாக கருதினார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாரிமுத்து, அவரது மைத்துனரான வள்ளிநாயகபுரத்தை சேர்ந்த ஆதிலிங்கம் மகன் கார்த்திக் (20) ஆகிய 2 பேரும் சேர்ந்து பார்த்தசாரதியை வெட்டிக் கொலை செய்தனர். பின்னர் அவர்கள் அங்கு இருந்து தப்பி சென்றுவிட்டனர்.
2 பேர் கைது
இதுகுறித்து தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவக்குமார், முத்துகணேஷ் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் கொலையாளிகளை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மதியம் மாரிமுத்து, கார்த்திக் ஆகிய 2 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, மாரிமுத்து மனைவி லட்சுமி, பால்ராஜூடன் சென்றதால் அவமானம் ஏற்பட்டதாகவும், அவருக்கு ஆதரவாக இருந்த பார்த்தசாரதியை, மாரிமுத்து தனது மைத்துனருடன் சேர்ந்து வெட்டிக் கொலை செய்ததும் தெரியவந்தது. மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
தாய் சாவு
இதற்கிடையே கொலை செய்யப்பட்ட பார்த்தசாரதியின் தாய் கலா (57) என்பவர் ஏற்கனவே மூச்சுத்திணறல் காரணமாக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் மகன் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்த கலாவும் பரிதாபமாக இறந்தார்.
நேற்று காலையில் பார்த்தசாரதியின் உடல் பிரேத பரிசோதனை முடிந்த பிறகு தூத்துக்குடி மையவாடியில் தகனம் செய்யப்பட்டது. தொடர்ந்து அவரது தாய் கலாவின் உடலும் தகனம் செய்யப்பட்டது. ஒரே நேரத்தில் தாய், மகன் உடல் தகனம் செய்யப்பட்டதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story