மாவட்ட செய்திகள்

போடிமெட்டு மலைப்பாதையில் மீண்டும் மண்சரிவு + "||" + On the Bodimettu hill Landslide again

போடிமெட்டு மலைப்பாதையில் மீண்டும் மண்சரிவு

போடிமெட்டு மலைப்பாதையில் மீண்டும் மண்சரிவு
கொட்டித்தீர்த்த கனமழை எதிரொலியாக, போடிமெட்டு மலைப்பாதையில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டது. ராட்சத பாறைகள் உருண்டு விழுந்ததால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
போடி:

போடிமெட்டு மலைப்பாதை

தேனி மாவட்டம் போடியில் இருந்து, கேரள மாநிலம் மூணாறை இணைக்கும் முக்கிய சாலையாக போடிமெட்டு மலைப்பாதை உள்ளது. இந்த மலைப்பாதை, 20 கிலோமீட்டர் தூரம் உடையது ஆகும். வளைந்து நெளிந்து செல்லும் அபாயகரமான 17 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது இந்த மலைப்பாதை.

இந்தநிலையில் போடிமெட்டு மலைப்பகுதியில், கடந்த 3 தினங்களாக தொடர்மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 13 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. 

கனமழை காரணமாக போடி மற்றும் போடிமெட்டு பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. குறிப்பாக கொட்டக்குடி ஆற்றில் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அந்த ஆற்றின் குறுக்கே உள்ள பிள்ளையார் தடுப்பணை நிரம்பி வழிகிறது. 

மலைப்பகுதியில் ஆங்காங்கே திடீர் அருவி உருவாகி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. போடி மெட்டு மலைப்பாதையில் பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. 

உருண்டு விழுந்த ராட்சத பாறைகள்

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை முதல் இரவு வரை பலத்த மழை கொட்டித்தீர்த்தது. இதனால் 2-வது நாளாக நேற்று ஆங்காங்கே மலைப்பாதையில் 12-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. 

மலைப்பாதையின் 9-வது கொண்டை ஊசி வளைவில் ராட்சத மரம் ஒன்று வேரோடு சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தேசிய நெடுஞ்சாலைத்துறையினர், வனத்துறையினர், வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் எந்திரங்கள் மூலம் மரத்தை அறுத்து  அப்புறப்படுத்தினர்.
 
இதேபோல் போடிமெட்டு மலைப்பாதையின் 7-வது கொண்டை ஊசி வளைவில், ராட்சத பாறைகள் உருண்டு விழுந்தன. அந்த பாறைகள், பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டன.

போக்குவரத்துக்கு தடை

பாறைகள், மரங்கள் விழுந்ததாலும், மண்சரிவு ஏற்பட்டதாலும் போடி மெட்டு மலைப்பாதையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக-கேரளா இடையே வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. 

கேரளாவில் இருந்து வருகிற வாகனங்கள் போடிமெட்டு சோதனைச்சாவடியிலும், தமிழகத்தில் இருந்து கேரளா நோக்கி செல்லும் வாகனங்கள் முந்தல் சோதனைச்சாவடியிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால் விவசாயிகள், ஏலக்காய் ேதாட்ட தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

தொடர்ந்து மழை பெய்து வருவதால், போடிமெட்டு மலைப்பாதை அபாயகரமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த மலைப்பாதையில் இன்னும் ஓரிரு நாட்கள் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.