விழுப்புரம் மாவட்டத்தில் தனித்தனி விபத்து பயிற்சி டாக்டர் உள்பட 5 பேர் பலி
விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த தனித்தனி விபத்துகளில் பயிற்சி டாக்டர் உள்பட 5 பேர் பலியானார்கள்
விழுப்புரம்
பயிற்சி டாக்டர்
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த விஷ்ணு மகன் அபிஜித் (வயது 24). இவர் மருத்துவம் படித்துவிட்டு புதுச்சேரி மாநிலம் மதகடிப்பட்டு பகுதியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி டாக்டராக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று இரவு அபிஜித் மதகடிப்பட்டிலிருந்து புதுச்சேரிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் பகுதியில் சென்றபோது எதிரே வந்த லாரி மோதியதில் படுகாயம் அடைந்த அபிஜித் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கண்டமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலிபர் சாவு
மயிலம் அருகே செண்டூர் கிராமத்தைச் சேர்ந்த சோம்பு என்பவரின் மகன் ராஜா என்கிற ராஜாராம்(24). சம்பவத்தன்று இவர் தனது நண்பர்களான சஞ்சீவிராஜன்(25), கோவிந்தன்(25) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் விழுப்புரத்தில் இருந்து செண்டூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். பாலப் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிள் திடீரென விபத்துக்குள்ளானது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து படுகாயம் அடைந்த 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜா இறந்தார். இதுகுறித்து சோம்பு கொடுத்த புகாரின் பேரில் மயிலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மினி லாரி
விழுப்புரம் அருகே உள்ள நங்காத்தூர் மகிமை புரம் பகுதியை சேர்ந்தவர் மரியதாஸ் இவரது மனைவி ஆரோக்கியமேரி(79). இவர் நேற்று முன்தினம் காலையில் தனது வீட்டின் வெளியில் சலவை செய்த துணியை கொடியில் உலர போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கே சமையல் சியாஸ் சிலிண்டர்களை இறக்கிக் கொண்டிருந்த மினி லாரியை அதன் டிரைவர் பின்னோக்கி இயக்கியபோது அங்கே நின்றுகொண்டிருந்த ஆரோக்கியமேரியின் மீது மோதியதில் படுகாயம் அடைந்த அவா் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து புகாரின் பேரில் கஞ்சனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆரோவில்
புதுச்சேரி மாநிலம் இடையார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனி மகன் ஜெகன்நாதன்(24). சம்பவத்தன்று இவர் தனது நண்பர் அரங்கனூரை சேர்ந்த பிரகாஷ்(24) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் மார்க்கமாக சென்று கொண்டிருந்தனர். வானூரை அடுத்த மொரட்டாண்டி என்ற இடத்தில் வந்தபோது முன்னால் சென்ற லாரி ஒன்று திடீரென வலதுபுறம் திரும்பியதால் லாரியின் பின்புறம் ஜெகன்நாதன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஜெகன்நாதன், பிரகாஷ் இருவரையும் அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ஜெகநாதன் பரிதாபமாக இறந்தார். பிரகாஷ் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்த புகாரின்பேரில் புதுச்சேரி பாவனா நகரை சேர்ந்த லாரி டிரைவர் பாலசுப்பிரமணியன்(32) மீது ஆரோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அனந்தபுரம்
செஞ்சி அருகே உள்ள மட்டப்பாறை என்ற ஊரை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் மகன் ஜெயக்குமார்(28). இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் செஞ்சிக்கு சென்று மீண்டும் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். மட்டபாறை அருகே வந்தபோது திடீரென நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்த ஜெயக்குமாரை அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து புகாரின் பேரில் அனந்தபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தாமரைச்செல்வன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story