வழிப்பறி செய்து தப்பிய வாலிபர்கள் துப்பாக்கி முனையில் கைது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அதிரடி
வேலூரில் வழிப்பறி செய்து தப்பிய வாலிபர்கள் 2 பேரை போலீஸ் சூப்பிரண்டு விரட்டி சென்று துப்பாக்கி முனையில் கைது செய்தார்.
வேலூர்
வேலூரில் வழிப்பறி செய்து தப்பிய வாலிபர்கள் 2 பேரை போலீஸ் சூப்பிரண்டு விரட்டி சென்று துப்பாக்கி முனையில் கைது செய்தார்.
வழிப்பறி
பள்ளிகொண்டா, அகரம்சேரி, காந்திநகரை சேர்ந்தவர் சதீஷ் (வயது 21). இவர் கிரீன்சர்க்கிள் அருகே சாலையோரம் பச்சை குத்தும் வேலை செய்து வந்தார். நேற்று பகலில் அங்கு வந்த 3 வாலிபர்கள் திடீரென கத்தியை காட்டி சதீஷிடம் பணம் கேட்டு மிரட்டினர். அவர் பணம் இல்லை என்று கூறவே அவரிடம் இருந்த ரூ.1,200 மற்றும் செல்போனை பறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சதீஷ் கூச்சலிட்டார். இதையடுத்து வாலிபர்கள் 3 பேரும் மோட்டார்சைக்கிளில் அங்கிருந்து வேகமாக வேலூர் நோக்கி சென்றனர்.
நேஷனல் தியேட்டர் சந்திப்பு அருகே அவர்கள் கைகளில் 2 அரிவாளுடன் வேகமாக சென்றனர். அப்போது அந்த சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் இதைக்கண்டார். உடனடியாக அந்த வாலிபர்களை விரட்டிச் செல்லுமாறு டிரைவரிடம் கூறினார். அதன்பேரில் போலீஸ் வாகனம் அவர்களை பின்தொடர்ந்து சென்றது. தனியார் மருத்துவமனையின் வாசல் அருகே 3 பேரை போலீஸ்சூப்பிரண்டு செல்வக்குமார் மடக்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்களில் 2 பேர் மருத்துவமனைக்குள் ஓடினர்.
துப்பாக்கி முனையில்...
உடனடியாக போலீஸ் சூப்பிரண்டு செல்வக்குமார் இருவரையும் பிடிக்க தனது பாதுகாவலரான சதீஷ்குமாருக்கு (கன்மேன்) உத்தரவிட்டார். மற்றொரு வாலிபர் மோட்டார்சைக்கிளில் தப்ப முயன்றார். அவரை போலீஸ் சூப்பிரண்டு பிடிக்க முயன்றார். அதற்குள் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார்.
மருத்துவமனைக்குள் தப்பி ஓடிய 2 பேரை பாதுகாவலர் துரத்தினார். ஒருகட்டத்தில் இருவரையும் துப்பாக்கி முனையில் பாதுகாவலர் சதீஷ்குமார் பிடித்தார். பிடிபட்ட 2 வாலிபர்களும் வடக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
அவர்களிடம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் நடத்திய விசாரணையில், அவர்கள் சலவன்பேட்டையை சேர்ந்த 17, 18 வயதுடைய வாலிபர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து கத்தி, அரிவாள் மற்றும் ரூ.1,200, செல்போன் ஆகியரற்றை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். 2 வாலிபர்களை விரட்டிச் சென்று பிடித்த சதீஷ்குமாருக்கு கைக்கடிகாரம் பரிசளிக்க உள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் தெரிவித்தார். மேலும் பாதுகாவலரை அவர் பாராட்டினார்.
சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ
வழிப்பறியில் ஈடுபட்டு மோட்டார்சைக்கிளில் தப்பிய 3 பேரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் தனது வாகனத்தில் துரத்திச் செல்வது, 3 பேரையும் மடக்குவது, அதில் ஒருவர் மோட்டார்சைக்கிளுடன் தப்பிச்செல்வது அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ளது. மேலும் மருத்துவமனைக்குள் தப்பிச் சென்ற 2 பேரை பாதுகாவலர் சதீஷ்குமார் விரட்டிச் சென்று பிடிக்கும் காட்சிகளும் மருத்துவமனையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோக்கள் வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சினிமா பாணியில் விரட்டிச் சென்று பிடித்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story