தீவு பகுதியில் பலத்த மழை
ராமேசுவரம் தீவு பகுதியில் பலத்த மழை பெய்ததால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
ராமேசுவரம்,
ராமேசுவரம் தீவு பகுதியில் பலத்த மழை பெய்ததால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
நல்லமழை
இலங்கை கடல் பகுதியை ஒட்டி தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகி உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலையை தொடர்ந்து தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் 3 நாட் களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
இந்த நிலையில் வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலையை தொடர்ந்து ராமேசுவரம் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்து மழை பெய்ய தொடங்கியது. அதிகாலையிலும் இடைவிடாமல் நல்ல மழை பெய்தது. பின்னர் மீண்டும் காலை 8 மணியில் இருந்து பகல் 2 மணி வரையிலும் ராமேசுவரம் பகுதியில் இடைவிடாமல் பலத்த மழை பெய்தது.
கடும் அவதி
தொடர்ந்து பெய்த பலத்த மழையால் ராமேசுவரம் கோவில் பகுதியில் இருந்து பஸ் நிலையம் செல்லும் ராமதீர்த்தம் அருகே தேசிய நெடுஞ்சாலை முழுவதும் மழைநீர் அதிக அளவில் குளம்போல் தேங்கி நின்றது. இதனால் பொது மக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதி அடைந்தனர். தேசிய நெடுஞ்சாலையில் தேங்கி நிற்கும் மழை நீரானது நகராட்சி நிர்வாகம் மூலம் மோட்டார் வைத்து வெளி யேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதேபோல் கோவிலின் தெற்கு ரத வீதி சாலை மற்றும் மார்க்கெட் செல்லும் சாலையிலும், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மணிமண்டபம் கட்டிடத்தின் முன்பும் மழைநீர் அதிக அளவில் தேங்கி நின்றது. பஸ் நிலையம் எதிரே உள்ள காவல்துறை தற்காலிக சோதனை சாவடியை சுற்றிலும் மழைநீர் அதிக அளவில் சூழ்ந்து நின்றது.
இடைவிடாமல் மழை
இதேபோல் பாம்பன், தங்கச்சிமடம் பகுதியிலும் நேற்று முன்தினம் முதல் நல்ல மழை பெய்ய தொடங்கியது. நேற்று பகல் முழுவதும் இடைவிடாமல் மிதமான மழை பெய்து கொண்டிருந்தது. நேற்று காலை 8 மணியுடன் மழைநின்றது 24 மணிநேரத்தில் ராமேசுவரத்தில் 54.2 மில்லி மீட்டரும், தங்கச்சிமடத்தில் 40.6 மில்லிமீட்டரும், பாம்பனில் 31.5 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
Related Tags :
Next Story