கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் பின்தங்கி உள்ளதால் அதிகாரிகளுடன் உள்ளாட்சி பிரதிநிதிகள் இணைந்து பணியாற்ற வேண்டும்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரானா தடுப்பூசி செலுத்தும் பணியில் அரசு அலுவலர்களுடன், உள்ளாட்சி பிரதிநிதிகளும் இணைந்து பணியாற்ற வேண்டும் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரானா தடுப்பூசி செலுத்தும் பணியில் அரசு அலுவலர்களுடன், உள்ளாட்சி பிரதிநிதிகளும் இணைந்து பணியாற்ற வேண்டும் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
பின்தங்கி உள்ளோம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்றை முழுமையாக கட்டுப்படுத்தி பொதுமக்கள் சகஜ நிலைமைக்கு திரும்பிட மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தபோதிலும் தடுப்பூசி முதல் தவணை 61 சதவீத நபர்களுக்கும், இரண்டாம் தவணை 23 சதவீத நபர்களுக்கும் மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்துவதில் தமிழகத்திலேயே நமது மாவட்டம் மிகவும் பின் தங்கியுள்ளது.
மற்ற மாவட்டங்களில் முதல் தவணை தடுப்பூசி அதிக நபர்கள் செலுத்திக் கொண்டு வருகிறார்கள். ஆனால் நமது மாவட்டத்தில் இன்னும் அதிக அளவு நபர்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். பணியாளர்கள் இவர்களை கண்டறிந்து வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ள டோக்கன் வழங்கியும், பல்வேறு இடங்களில் பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை.
இணைந்து பணியாற்ற வேண்டும்
ஆகவே இனிநடைபெறும் தடுப்பூசி முகாமில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உள்ளாட்சி தலைவர்கள், உறுப்பினர்கள் அரசு அலுவலர்களுடன் இணைந்து கொரோனா தடுப்பூசி முகாமிற்கு ஒவ்வொரு குடும்பத்திலும் தடுப்பூசி முதல் தவணை செலுத்தி கொள்ளாதவர்கள், இரண்டாம் தவணை காலக்கெடு முடிந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களை கண்டறிந்து அவர்களை தடுப்பூசி செலுத்திக் கொள்ள அழைத்து வர வேண்டும். இதுவே உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மக்களுக்கு செய்யும் பெரும் தொண்டாகும். பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளையும், பாதுகாப்பு அம்சங்களையும் மக்களுக்கு தெரிவித்து மாவட்ட நிர்வாகத்திற்கு உறுதுணையாக இருந்து மக்கள் பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story