திருச்சியில் பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம்


திருச்சியில் பல்வேறு  அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 Nov 2021 1:24 AM IST (Updated: 25 Nov 2021 1:24 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி, நவ.25-
திருச்சியில் பல்வேறு  அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வேலைநீக்கம்
திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். கொரோனா தொற்று காலத்திலும் பணியாற்றிய நிலையில் கடந்த 16-ந் தேதி முதல் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் திடீர் வேலை நீக்கம் செய்யப்பட்டனர்.
ஆகவே இவர்களுக்கு முதல்-அமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் மீண்டும் வேலை வழங்கக்கோரி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நேற்று கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. சி.ஐ.டி.யு. மாவட்ட துணைத்தலைவர் மாறன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட துணை செயலாளர் ராஜூ போராட்டத்தை விளக்கி பேசினார். ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் மோகன், மாவட்ட செயலாளர் கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இந்திய குடியரசு-நாம் தமிழர் கட்சியினர்
இதேபோல் திருச்சி மத்திய பஸ் நிலையம் பகுதியில் கழிவுநீர் தேங்கி நிற்பதை கண்டித்து இந்திய குடியரசு கட்சி மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதேபோல் பள்ளி, கல்லூரி மாணவிகள் மீதான பாலியல் துன்புறுத்தல்களை கண்டித்து நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை சார்பில் திருச்சிபாலக்கரை பிரபாத் ரவுண்டானா அருகே நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர் மாவட்ட செயலாளர் ரா.பிரபு தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் சேது.மனோகரன் முன்னிலை வகித்தார்.
இதில் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் நூர்ஜகான், மாவட்ட மகளிர்பாசறை செயலாளர் லெட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். பள்ளி கல்லூரி மாணவிகளை பாலியல் துன்புறுத்தல் செய்யும் ஆசிரியர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். பாலியல் வழக்குகளை 3 மாதத்தில் முடித்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்பன உள்ளபட பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Next Story