பஞ்சாயத்து அலுவலகத்துக்கு பூட்டுக்கு மேல் பூட்டு போட்ட தலைவர்
பீமநகரியில் செயலாளருடன் ஏற்பட்ட மோதலால் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு பூட்டுக்கு மேல் பூட்டு போட்ட தலைவரால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆரல்வாய்மொழி,
பீமநகரியில் செயலாளருடன் ஏற்பட்ட மோதலால் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு பூட்டுக்கு மேல் பூட்டு போட்ட தலைவரால் பரபரப்பு ஏற்பட்டது.
தலைவர்- செயலாளர் மோதல்
வெள்ளமடம் அருகே பீமநகரி பஞ்சாயத்து அலுவலகம் உள்ளது. இந்த பஞ்சாயத்து தலைவராக சஜிதா சுப்பிரமணியனும், செயலாளராக லலித் இன்பென்றாவும் உள்ளனர்.
செயலாளர் மீது தலைவர் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். அதாவது பொதுமக்களுக்கு சேரவேண்டிய அரசு திட்டங்களை தலைவருக்கு தெரியாமல் ெசயலாளர் வீடு வீடாக சென்று கொடுப்பதாகவும், அலுவலகத்திற்கு அவர் சரியாக வருவதில்லை எனவும், ஊரக வளர்ச்சி பணிகளுக்கு இடையூறாக இருப்பதாகவும் குற்றம் சாட்டுகிறார். இதனால் இருவருக்கும் இடையே மோதல் முற்றவே பஞ்சாயத்து செயலாளரை உடனே மாற்ற வேண்டும் என தலைவர் வலியுறுத்தி வருகிறார்.
பூட்டுக்கு மேல் பூட்டு
இந்த கோரிக்கையை வலியுறுத்தி தலைவர் சஜிதா சுப்பிரமணியன் நேற்று முன்தினம் பஞ்சாயத்து அலுவலகத்தில் ஏற்கனவே உள்ள பூட்டின் மீது வேறு ஒரு பூட்டை போட்டார். பின்னர் அதன் சாவியை வட்டார வளர்ச்சி அலுவலர் உதய ரோகிணியிடம் கொடுத்துள்ளார். மேலும் இது சம்பந்தமாக மாவட்ட கலெக்டர் உள்பட அதிகாரிகளுக்கு பஞ்சாயத்து தலைவர் சஜிதா சுப்பிரமணியன் மனு கொடுத்துள்ளார். செயலாளரை மாற்ற வில்லையெனில் அனைவரும் ராஜினாமா செய்யவும் தயார் எனவும் தலைவர் கூறியுள்ளார்.செயலாளருடன் ஏற்பட்ட மோதலால் பஞ்சாயத்து அலுவலகத்தில் தலைவர் பூட்டின் மேல் பூட்டு போட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு இதே செயலாளர் லலித் இன்பென்றா சகாயநகர் பஞ்சாயத்தில் பணிசெய்யும்போது தலைவருடன் ஏற்பட்ட மோதலால் போராட்டத்திற்கு பின் மாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story