வியாபாரிகள் போராட்டம்


வியாபாரிகள் போராட்டம்
x
தினத்தந்தி 25 Nov 2021 2:12 AM IST (Updated: 25 Nov 2021 2:12 AM IST)
t-max-icont-min-icon

கடைகள் அப்புறப்படுத்தப்படுவதை கண்டித்து தஞ்சையில் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்;
கடைகள் அப்புறப்படுத்தப்படுவதை கண்டித்து தஞ்சையில் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காலஅவகாசம்
தஞ்சை அண்ணாசிலையில் இருந்து பனகல் கட்டிடம் செல்லக்கூடிய சாலையோரத்தில் செல்போன் கடைகள், துணிக்கடைகள், டீக்கடைகள், செருப்பு கடைகள் என 54 கடைகள் உள்ளன. இந்த கடைகள் எல்லாம் மழைநீர் வடிகால் மீது கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கடைகளை அப்புறப்படுத்திவிட்டு ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் மழைநீர் வடிகால் புதிதாக கட்ட மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதனால் கடைகளை இடிக்க திட்டமிட்டுள்ளதால் கடைகளை காலி செய்யும்படி வியாபாரிகளை மாநகராட்சி அதிகாரிகள் வலியுறுத்தினர். ஆனால் மாற்று இடம் தரும்வரை கடைகளை காலி செய்ய மாட்டோம் என வியாபாரிகள் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக கலெக்டர், மாநகராட்சி ஆணையரை சந்தித்து மனுவும் கொடுத்துள்ளனர். இருந்தாலும் 2 நாட்கள் மட்டுமே காலஅவகாசம் வழங்கப்படும் எனவும், அதற்குள் பொருட்களை எடுத்து செல்ல வேண்டும் எனவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துவிட்டனர்.
வியாபாரிகள் போராட்டம்
இதன்காரணமாக தங்களது வாழ்வாதாரத்தை காக்க வலியுறுத்தியும், கடைகள் அப்புறப்படுத்தப்படுவதை கண்டித்தும், அப்படியே அப்புறப்படுத்துவதாக இருந்தால் தற்போது உள்ள கடைகளின் அருகே மாற்று இடம் வழங்க கோரியும் வியாபாரிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். கடைகளின் முன்பு நாற்காலிகளை போட்டு அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கடைகளை காலி செய்ய வலியுறுத்துவதை கண்டித்து 2-வது நாளாக கடையடைப்பு போராட்டத்திலும் வியாபாரிகள் ஈடுபட்டனர்.

Next Story