பொதுப்பணித்துறை என்ஜினீயர் வீட்டில் தண்ணீர் குழாய்க்குள் பதுக்கிய ரூ.13.50 லட்சம் சிக்கியது
கலபுரகியில், பொதுப்பணித்துறை என்ஜினீயர் வீட்டில் தண்ணீர் குழாய்க்குள் பதுக்கிய ரூ.13.50 லட்சம் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரு:
போலீசாரை அனுமதிக்கவில்லை
கலபுரகி மாவட்டம் ஜேவர்கியில் பொதுப்பணித்துறை ஜூனியர் என்ஜினீயராக பணியாற்றி வரும் சாந்தனகவுடா தனது குடும்பத்துடன் கலபுரகி குப்பி காலனியில் வசிக்கிறார். நேற்று அதிகாலையில் ஊழல் தடுப்பு படை போலீசார், அவரது வீட்டுக்கு சென்றபோது, அவர்களை முதலில் சாந்தனகவுடா உள்ளே அனுமதிக்கவில்லை. 15 நிமிடங்கள் கழித்து தான் வீட்டுக்குள் வந்து சோதனை நடத்த அனுமதித்திருந்தார்.
அந்த 15 நிமிடத்திற்குள் தனது வீட்டில் இருந்த கட்டுக்கட்டான பணத்தை மறைத்து வைக்கும் வேலையில் ஈடுபட்டு இருந்தார். அதன்படி, தனது வீட்டில் இருந்து தண்ணீர் வெளியேற்றுவதற்காக மேல் மாடியில் இருந்து தரை தளத்திற்கு பொருத்தப்பட்டு இருந்த பிளாஸ்டிக் குழாய்க்குள் பணத்தை திணித்து வைத்திருந்தார்.
ரூ.13.50 லட்சம் சிக்கியது
அந்த பணம் குழாய் வழியாக தரை தளத்திற்கு விழுந்து விடக்கூடாது என்பதற்காக துணி, கற்களால் குழாயை சாந்தனகவுடா அடைத்து வைத்திருந்தார். இதனை கவனித்த போலீசார், குழாயில் இருந்த துணி, கற்களை அகற்றியபோது கட்டுக்கட்டாக ரூ.500 நோட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தது. அந்த குழாயில் மட்டும் ரூ.13.50 லட்சம் இருந்தது. தண்ணீர் பிடிப்பது போல ஒரு வாளியில் பணத்தை குழாயில் இருந்து விழும் போது போலீசார் பிடித்திருந்தனர்.
மேலும் ரூ.15 லட்சத்தை தனது மகனின் அறையிலும், வீட்டின் சிலாப்பில் ரூ.6 லட்சத்தையும் சாந்தனகவுடா தூக்கி வீசி இருந்தார். அத்துடன் வீட்டில் இருந்த லாக்கர் சாவியையும் சாந்தனகவுடா கொடுக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. பின்பு அந்த சாவியை வாங்கி அதில் இருந்த தங்க நகைகளை போலீசார் கைப்பற்றி இருந்தனர். ஒட்டு மொத்தமாக சாந்தனகவுடா வீட்டில் ரூ.56 லட்சம் நகை, பணம் சிக்கி இருந்தது. சாந்தனகவுடா வீட்டு பிளாஸ்டிக் குழாயில் இருந்த பணத்தை போலீசார் எடுக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story