தேவைக்கு அதிகமாக தண்ணீரை சேமிக்க வேண்டாம்: குடிநீரில் 11 டன் திரவ வடிவிலான குளோரின் கலந்து வினியோகம்


தேவைக்கு அதிகமாக தண்ணீரை சேமிக்க வேண்டாம்: குடிநீரில் 11 டன் திரவ வடிவிலான குளோரின் கலந்து வினியோகம்
x
தினத்தந்தி 25 Nov 2021 3:28 PM IST (Updated: 25 Nov 2021 3:28 PM IST)
t-max-icont-min-icon

சென்னை மாநகரில் குடிநீரில் தினசரி 11 டன் திரவ வடிவிலான குளோரின் கலந்து பாதுகாப்பான முறையில் வினியோகம் செய்யப்படுகிறது. பொதுமக்களும் தேவைக்கு அதிகமாக குடிநீரை சேமிக்க வேண்டாம் என்று குடிநீர் வாரியம் அறிவுறுத்தி உள்ளது.

சென்னை, 

சென்னையில் உள்ள கீழ்ப்பாக்கம், புழல், சூரப்பட்டு, வீராணம், செம்பரம்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள நீரேற்றும் நிலையங்கள் மற்றும் நெம்மேலி, மீஞ்சூர் ஆகிய கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் மூலமாக மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் வசிக்கும் 85 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. நாளொன்றுக்கு 850 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ஆயிரம் மில்லியன் லிட்டர் வழங்கப்பட்டு வருகிறது.

குடிநீரின் தரம் தினசரி 300 இடங்களில் குடிநீர் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது பருவமழையின் காரணமாக தினசரி 600 இடங்களில் குடிநீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கடந்த 23-ந்தேதி வரை 8 ஆயிரத்து 929 இடங்களில் குடிநீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு குடிநீரின் தரம் பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து இந்த பணிகள் நடந்து வருகிறது.

பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கும் வகையில், தினசரி கீழ்ப்பாக்கம், சூரப்பட்டு, செம்பரம்பாக்கம், புழல், வீராணம் நீரேற்றும் நிலையங்கள் மற்றும் 16 குடிநீர் விநியோக நிலையங்களில் 11 டன் திரவ வடிவிலான குளோரின் செலுத்தப்பட்டு பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படுகிறது. அத்துடன் குடிநீரில் கலந்து பருகக்கூடிய குளோரின் மாத்திரைகள் 15 லட்சம் வழங்க இலக்கு நிர்ணயித்து, தற்போது 7 லட்சத்து 25 ஆயிரம் மாத்திரைகள் வழங்கப்பட்டு உள்ளன.

குளோரின் மாத்திரைகளை 15 லிட்டர் குடிநீரில் கலந்து 2 மணி நேரம் கழித்து பயன்படுத்த அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது. குடிநீரை காய்ச்சி குடிப்பதுடன், தேவைக்கு அதிகமாக குடிநீரை சேமித்து வைக்க வேண்டாம். அத்துடன், தொற்று நோய்கள் பரவாமல் இருக்க குடிநீரைச் சேமித்து வைக்க பயன்படும் பாத்திரங்கள், நீர்த்தேக்கத் தொட்டிகள் முறையாக சுத்தப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மேற்கண்ட தகவல்களை சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Next Story