காய்ச்சல் எதிரொலியால் பொதுமக்கள்


காய்ச்சல் எதிரொலியால் பொதுமக்கள்
x
தினத்தந்தி 25 Nov 2021 5:00 PM IST (Updated: 25 Nov 2021 5:00 PM IST)
t-max-icont-min-icon

அதிவேகமாக பரவும் காய்ச்சல் எதிரொலியால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்

தாராபுரம்
தாராபுரத்தில் அதிவேகமாக பரவும் காய்ச்சல் எதிரொலியால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். சுகாதாரத்துறையினர் போர்க்கால அடிப்படையில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாராபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் அதிவேகமாக பரவி வருகிறது. தாராபுரம் காமராஜபுரம், சீதாநகர், கிறிஸ்தவ அனுப்ப தெரு, பழைய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏராளமான பொதுமக்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் குவிகின்றனர். இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை எடுத்த பின்னரும் 3 நாட்கள் காய்ச்சலும் அதன் தொடர்ச்சியாக தொண்டைவலி, இருமல், உடல்வலி ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர். இதனால் வேலைக்கு செல்லமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சாதாரண காய்ச்சலுக்கு சிகிச்சை எடுத்த பின்னர் குணமாகிவிடும் நிலையில் சிகிச்சை எடுத்தாலும் தொடர்ந்து 3 நாட்கள் காய்ச்சலும் அதன் தொடர்ச்சியாக பக்க விளைவுகளும் ஏற்படுவதால் இது ஏதோ மர்மக்காய்ச்சலாக இருக்குமோ என பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். சுகாதார துறையினர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கையில் ஈடுபட்டு காய்ச்சலால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் ஆய்வு செய்யவேண்டும். மேலும் சிறப்பு முகாம்கள் அமைத்து அந்தந்த பகுதிகளில் சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த ஒருவார காலமாக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் புறநோயாளிகள் பிரிவில் தினசரி சுமார் 120க்கும் மேற்பட்டோர்கள் காய்ச்சலுக்காக சிகிச்சை எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

Next Story