இந்து தமிழர் கட்சி சார்பில் 1¾ டன் இரும்பு வேலுடன் அறுபடை தலங்களில் யாத்திரை பழனியில் பக்தர்கள் வழிபாடு


இந்து தமிழர் கட்சி சார்பில் 1¾ டன் இரும்பு வேலுடன் அறுபடை தலங்களில் யாத்திரை பழனியில் பக்தர்கள் வழிபாடு
x
தினத்தந்தி 25 Nov 2021 12:26 PM GMT (Updated: 25 Nov 2021 12:29 PM GMT)

இந்து தமிழர் கட்சி சார்பில் 1¾ டன் இரும்பு வேலுடன் அறுபடை தலங்களில் யாத்திரை நடத்தப்பட்டது. அதன்படி பழனிக்கு வந்த வேலுக்கு பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

பழனி:

பழனிக்கு நேற்று காலை 27 அடி உயரத்தில் 1,800 கிலோ எடை கொண்ட இரும்பாலான பிரமாண்ட வேல் ஒரு லாரியில் கொண்டு வரப்பட்டது. இந்த வேலை பொதுமக்கள் அதிசயத்துடன் பார்த்தனர். 
இதையடுத்து அந்த பிரமாண்ட வேலுக்கு அடிவாரம் பாதவிநாயகர் கோவில் முன்பு வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அப்போது அங்கு வந்த பக்தர்கள் வேலுக்கு வழிபாடு செய்தனர். 
இதுகுறித்து வேலை கொண்டு வந்த இந்து மக்கள் கட்சி நிறுவனர் ராம.ரவிக்குமார் கூறுகையில், இந்த வேல் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்கு லாரியில் யாத்திரையாக கொண்டு செல்லப்படுகிறது. அதன்படி நேற்று முன்தினம் பிரமாண்ட வேலுடன் திருச்செந்தூரில் யாத்திரையை தொடங்கினோம். தொடர்ந்து திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலையில் உள்ள முருகன் கோவில்களுக்கு வேல் வைக்கப்பட்ட லாரியை கொண்டு சென்று வழிபாடு செய்யப்பட்டது. நாட்டின் ராணுவம் மற்றும் போலீஸ்துறைக்கு முருகப்பெருமான் வல்லமை தர வேண்டி பிரமாண்ட வேலுடன் யாத்திரை தொடங்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து சுவாமிமலை, திருத்தணி உள்ளிட்ட ஊர்களுக்கு சென்று வழிபட உள்ளேன். முடிவில் திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரி முருகன் கோவிலில் வேல் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது என்றார்.
முன்னதாக அவரை, பழனி நகர வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கவுரவ தலைவர் கண்பத் கிராண்ட் ஹரிகரமுத்து வரவேற்றார். பின்னர்  ராம.ரவிக்குமார் வேல் ஏற்றப்பட்ட லாரியுடன் கிரிவலம் வந்து முருகன் கோவிலில் தரிசனம் செய்தார். 

Next Story