தனியார் எஸ்டேட் தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்


தனியார் எஸ்டேட் தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 25 Nov 2021 7:21 PM IST (Updated: 25 Nov 2021 7:21 PM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் நிலுவை சம்பளம் கேட்டு தனியார் எஸ்டேட் தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

கூடலூர்

கூடலூரில் நிலுவை சம்பளம் கேட்டு தனியார் எஸ்டேட் தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். 

காத்திருப்பு போராட்டம்

நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள ஒரு தனியார் எஸ்டேட்டில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 6 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கடந்த 1 வாரமாக கருப்பு பேட்ஜ் அணிந்து கொண்டு பணியாற்றி வந்தனர். 

இந்த நிலையில் நிலுவை சம்பளத்தை வழங்கக்கோரி நேற்று எஸ்டேட் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து எஸ்டேட் அலுவலகத்திற்கு செல்லும் சாலையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏ.ஐ.டி.யு.சி. தலைவர் குணசேகரன் தலைமையில் 350-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்து கூடலூர் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்தனர். தொடர்ந்து தாசில்தார் தலைமையில் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் எஸ்டேட் அலுவலர்களுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. 

தொடர்ந்து பல கட்டங்களாக நடந்த பேச்சுவார்த்தையில் நிரந்தர தொழிலாளர்களுக்கு ஒரு மாத ஊதியமும், தற்காலிக தொழிலாளர்களுக்கு 2 வார சம்பளமும் உடனடியாக வழங்குவதாக எஸ்டேட் நிர்வாகம் உறுதி அளித்தது. மேலும் வருகிற 30-ந் தேதி குன்னூர் தொழிலாளர் நல உதவி ஆணையர் சமரசம் தலைமையில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் எஸ்டேட் நிர்வாகத்தினர் கலந்து கொண்டு தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவது குறித்து விளக்கம் அளிப்போம். 

பிரச்சினை முடிவுக்கு வந்தது

இதில் எடுக்கக்கூடிய முடிவுகளின் அடிப்படையில் எங்களது செயல்பாடு இருக்கும் என்று தெரிவித்தது. இதையடுத்து தொழிலாளர்களுக்கு நிலுவை சம்பளம் வழங்குவது குறித்த பிரச்சினை முடிவுக்கு வந்தது. 

இதுகுறித்து தொழிலாளர்கள் கூறும்போது, நிரந்தர தொழிலாளர்களுக்கு ஒரு மாத ஊதியமும், தற்காலிக தொழிலாளர்களுக்கு 2 வார ஊதியமும் வழங்கிய பின்னரே அனைவரும் வேலைக்கு திரும்புவோம். அதுவரையில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்றனர்.


Next Story