இளவயது திருமணம் குறித்து பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு
இளவயது திருமணம் குறித்து பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
திண்டுக்கல்:
இளவயது திருமணம் குறித்து பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி திண்டுக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று நடந்தது. இதற்கு திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர், இளவயது திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவிகளுக்கு விளக்கமளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக நேர்ந்தாலோ அல்லது இளவயதில் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டாலோ குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளை 1098 என்ற எண்ணில் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம். அதேபோல் பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாக நேர்ந்தால் 181 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இதுதவிர காவலன் செயலி மூலமும் குழந்தைகள், பெண்கள் புகார் தெரிவிக்கலாம் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு பெண் போலீஸ் ஏட்டு சித்ராசெல்வி மற்றும் பள்ளி மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக நவீன எல்.இ.டி. டி.வி. பொருத்தப்பட்ட வாகனம் மூலம் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் குழந்தைகள், பெண்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது தொடர்பான விழிப்புணர்வு காணொலி காட்சியும் மாணவிகளுக்கு காண்பிக்கப்பட்டது. இதையடுத்து திண்டுக்கல் பஸ் நிலையத்தில் பெண்களுக்கு பாலியல் ரீதியாக ஏற்படும் தொல்லைகள் குறித்து பயணிகளுக்கு குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Related Tags :
Next Story