மாவட்ட செய்திகள்

திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் 42 டன் தக்காளி தேக்கம் + "||" + 42 tonnes of tomatoes at Dindigul Gandhi Market

திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் 42 டன் தக்காளி தேக்கம்

திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் 42 டன் தக்காளி தேக்கம்
பொதுமக்கள் வாங்கிச்செல்ல ஆர்வம் காட்டாததால் திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் நேற்று தக்காளி தேக்கமடைந்தது.
திண்டுக்கல்: 


தக்காளி சாகுபடி
திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம், சாணார்பட்டி, வடமதுரை, அய்யலூர், செம்பட்டி, பழனி உள்பட பல்வேறு இடங்களில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு சாகுபடி செய்யப்படும் தக்காளிகள் திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு விற்பனைக்காக கொண்டுவரப்படுகிறது. அதேபோல் ஆந்திர மாநிலத்தில் இருந்தும் திண்டுக்கல் மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக தக்காளி கொண்டுவரப்படுகிறது.

கடந்த மாதம் வரை ஒரு கிலோ தக்காளி ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனை ஆனது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தக்காளியின் விலை இரு மடங்காக உயர்ந்து ரூ.80 முதல் ரூ.90 வரை விற்பனை ஆனது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தாலும் கூடுதல் விலை கொடுத்து தக்காளியை வாங்கிச்சென்றனர். ஆனால் அதன் பிறகும் தக்காளி விலை குறையவில்லை.

தேக்கம்
இந்த நிலையில் தொடர்மழை காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் தக்காளியின் வரத்து குறைந்தது. இருந்த போதிலும் ஆந்திர மாநிலத்தில் இருந்து திண்டுக்கல் மார்க்கெட்டுக்கு தக்காளி கொண்டுவரப்பட்டதால் அதன் விலை தொடர்ந்து உயராமல் இருந்தது. இதற்கிடையே ஆந்திராவில் இருந்து திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டுக்கு நேற்று காலை 42 டன் தக்காளி வரத்தானது. இதனால் அதன் விலை குறைந்து ஒரு கிலோ தக்காளி ரூ.60 முதல் ரூ.70 வரை நேற்று விற்பனை ஆனது.

ஆனாலும் தக்காளியை வாங்கிச்செல்ல பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் மதியத்துக்கு மேல் தக்காளி விலை மேலும் குறைந்து ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டது. அப்போதும் குறைந்த அளவிலேயே தக்காளி விற்பனை ஆனது. இதையடுத்து நேற்று காந்தி மார்க்கெட்டில் தக்காளி தேக்கமடைந்தது. இதன் காரணமாக வியாபாரிகள் கவலையடைந்தனர்.