மாவட்ட செய்திகள்

கடலூர் முதுநகரில் ஒரு கிலோ தக்காளி ரூ.30-க்கு விற்பனை + "||" + A kilo of tomatoes sells for Rs 30

கடலூர் முதுநகரில் ஒரு கிலோ தக்காளி ரூ.30-க்கு விற்பனை

கடலூர் முதுநகரில் ஒரு கிலோ தக்காளி ரூ.30-க்கு விற்பனை
கடலூர் முதுநகரில் ஒரு கிலோ தக்காளி ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனை பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கிச் சென்றனர்.
கடலூர் முதுநகர், 

தமிழகம், ஆந்திரா மற்றும் கேரளாவில் பெய்த தொடர் மழையால் உள்ளூர் மார்க்கெட்டுக்கு வெளியூரில் இருந்து கொண்டு வரப்படும் காய்கறிகள் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால் ஒரு சில காய்கறிகளின் விலை விண்ணைத் தொடும் அளவிற்கு கிடுகிடுவென அதிகரித்து காணப்படுகிறது. 
குறிப்பாக தக்காளி, வெங்காயம், பீன்ஸ், அவரைக்காய், கேரட், கத்தரிக்காய் போன்ற காய்கறிகள் கிலோ ரூ.100 மற்றும் அதற்கு மேல் விற்கப்படுவதால் சாமானிய மற்றும் நடுத்தர மக்கள் காய்கறிகளை வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

ரூ.100-க்கு விற்பனை

இதனையடுத்து தமிழக அரசும் பண்ணை பசுமை காய்கறிகள் மூலமாகவும், ரேஷன் கடைகள் மூலமாகவும் தக்காளி விற்பனையை தொடங்கியிருக்கிறது. கடலூர் நகரத்தில் ரூ.100 வரை விற்ற ஒரு கிலோ தக்காளி தற்போது ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  இந்த நிலையில் கடலூர் முதுநகரில் வியாபாரி ஒருவர் ஒரு கிலோ தக்காளியை ரூ.30-க்கு விற்பனை செய்துள்ளார். அதுபற்றிய விவரம் வருமாறு:-

போட்டி போட்டு...

கடலூர் முதுநகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் கடலூர்-சிதம்பரம் சாலையில் உள்ள சாலக்கரை பகுதியில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.30-க்கும், ஒரு கிலோ வெங்காயம் ரூ.25-க்கும் விற்பனை செய்யப்படுவதாக விலை பட்டியல் வைக்கப்பட்டிருந்தது.

இந்த தகவல் அப்பகுதியில் காட்டுத்தீ போல பரவியது. இதையடுத்து பொதுமக்கள் திரண்டு வந்து தக்காளி மற்றும் வெங்காயத்தை போட்டி போட்டு வாங்கிச்சென்றதை காணமுடிந்தது. ஒரு சில மணி நேரத்திலேயே 100 கிலோவுக்கும் மேற்பட்ட தக்காளி, வெங்காயம் விற்றுத்தீர்ந்து விட்டன.  இதுபற்றி வியாபாரி ராஜேஷ் கூறுகையில், கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் பகுதியில் இருந்து தக்காளியும், பெங்களூரு நகரத்தில் இருந்து வெங்காயத்தையும் வாங்கி வந்து குறைந்த விலைக்கு பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு நபருக்கு ஒரு கிலோ தக்காளி மட்டும் வழங்கப்பட்டது இன்றும் (வெள்ளிக்கிழமை) இதே விலைக்கு விற்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.