சோழர்கால பகவதி சிலை கல்வெட்டு கண்டெடுப்பு


சோழர்கால பகவதி சிலை கல்வெட்டு கண்டெடுப்பு
x
தினத்தந்தி 25 Nov 2021 9:47 PM IST (Updated: 25 Nov 2021 9:47 PM IST)
t-max-icont-min-icon

ஜவ்வாதுமலையில் சோழர்கால பகவதி சிலை கல்வெட்டு கண்டெடுப்பு

திருவண்ணாமலை

ஜமுனாமரத்தூர் தாலுகா ஜவ்வாதுமலையில் உள்ள புலியூர் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட கோட்டூர்கொல்லை கிராம மலைப்பகுதியில் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தினைச் சேர்ந்த ச.பாலமுருகன், மதன் மோகன், பழனிச்சாமி, சிற்றிங்கூர் ராஜா ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர். 

அப்போது அந்த பகுதியில் உள்ள சிறிய கோவில் ஒன்றில் கொற்றவை சிலையும், அதன் அருகில் சோழர் கால கல்வெட்டும் கண்டறியப்பட்டது.

 இக்கல்வெட்டு 13 வரிகளைக் கொண்டும், சுமார் 3 அடி உயரமும் உள்ளது. இக்கல்வெட்டு 11-ம் நூற்றாண்டில் முதலாம் குலோத்துங்க சோழனின் 8-ம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்டிருக்கலாம் என்றும், இக்கல்வெட்டில் நெல்வாடை மாதன் சித்திரமேழி, போடன் நக்கன், மாறன் மாதன், பன்றன் ஆகிய நால்வரும் இந்த பகவதி சிலையை செய்து அளித்துள்ளனர் என்பது குறிப்பிடப்பட்டு உள்ளது. 

கொற்றவையை பகவதி என்ற பெயரிலும் வழிபடப்படுகிறது என்பதற்கு இது ஒரு சான்றாகும். இச்சிலை 11-ம் நூற்றாண்டிலேயே ஜவ்வாதுமலையில் அதிகம் போக்குவரத்து இல்லாத பகுதியில் கிடைத்திருப்பது ஜவ்வாதுமலை வரலாற்றில் முக்கியத்துவம் பெறும் அரிய வகை கல்வெட்டு என்று வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். 

ஜவ்வாதுமலையில் கிடைத்து வரும் நடுகற்களும் கல்வெட்டுகளும் தொல்லியல் தடயங்களும் தொடர்ந்து ஜவ்வாது மலைக்கு புதிய வரலாற்றுச் செய்திகளை அளித்துவருகின்றன. இவற்றை போற்றி பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகும் என்று  அவர்கள் தெரிவித்தனர். 

Next Story