மாவட்டத்தில் கன மழை; 2 வீடுகள் இடிந்தன மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை


மாவட்டத்தில் கன மழை; 2 வீடுகள் இடிந்தன மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என  எச்சரிக்கை
x
தினத்தந்தி 25 Nov 2021 6:16 PM GMT (Updated: 25 Nov 2021 6:16 PM GMT)

புதுக்கோட்டை மாவட்டத்தில் கன மழை பெய்தது. 2 வீடுகள் இடிந்து விழுந்தன. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கீரமங்கலம்:
தொடர் மழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைக்காலம் தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இடிமின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
புதுக்கோட்டையில் நேற்று காலை முதல் மிதமான மற்றும் லேசான மழை பெய்தது. பின் மதியம் 12 மணி அளவில் கருமேகம் சூழந்து காற்று வீசியது. 1 மணிக்கு முதல் இடைவிடாது கனமழை மற்றும் லேசான மழை தொடர்ந்து பெய்தது. இந்த மழையினால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இந்த தொடர் மழையினால் வாகன போக்குவரத்து குறைவாகவே இருந்தது. மேலும் கடைவீதி பகுதிகளில் பொதுமக்கள் இன்றி  வெறிச்சோடி காணப்பட்டது. 
பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழையை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த தொடர் மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. புதுக்கோட்டையில் கடந்த சில நாட்களாக தொடர் மழையின் காரணமாக ஏரிகள் குளங்கள் போன்ற நீர் நிலைகள் நிரம்பி வழிகிறது.
2 வீடுகள் இடிந்தன
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த சில நாட்களாக மீண்டும் கன மழை பெய்ய தொடங்கியுள்ளது. இந்த நிலையில் நேற்று அதிகாலை குளமங்கலம் தெற்கு கிராமத்தில் வயதான செல்லத்துரை - கருப்பாயி தம்பதி வசித்து வந்த பழைய ஓட்டு வீட்டின் ஒரு பக்க சுவர் முற்றிலும் இடிந்தது சாய்ந்தது. வெளிப்பக்கமாக சுவர் சாய்ந்ததால் உயிர் சேதம் ஏதுமின்றி உயிர் தப்பினார்கள்.
அதேபோல அதே ஊரில் தனியாக வசித்து வந்த ரெங்கசாமி (வயது 70) என்ற முதியவரின் ஓட்டு வீடும் முற்றிலும் இடிந்து சேதமடைந்தது. வயது முதிர்ந்த உடல்நலமில்லாதவர்கள் வீடுகளை இழந்து நின்ற போது ஊராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறையினர், போலீசார் வீடுகளை இழந்தவர்களை மாற்று இடங்களில் தற்காலிகமாக தங்க வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
கோட்டைப்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார கடலோரப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் வீதிகளில் மழைநீர் வெள்ளப்பெருக்காக ஓடியது. பலத்த மழை காரணமாக மறு அறிவிப்பு வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல கூடாது என மீன்வளத் துறையினர் எச்சரித்துள்ளனர்.
பசுமாடு சாவு
காரையூர் அருகே உள்ள சேரனூர் கிராமத்தை சேர்ந்த சின்னத்தம்பி மகன் மூக்கையா என்பவருக்கு சொந்தமான பசுமாடு மழையினால் இறந்துள்ளது. தகவலறிந்த அரசமலை வருவாய் ஆய்வாளர் ரவிச்சந்திரன், நெருஞ்சிகுடி கிராம நிர்வாக அலுவலர் முருகேசன் கால்நடை மருத்துவ அலுவலர்களுடன் நேரில் பார்வையிட்டனர்.
பொன்னமராவதி
பொன்னமராவதி ஒன்றிய பகுதிகளில் நேற்று கன மழை சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக பெய்தது.   பொன்னமராவதி ஒன்றிய பகுதியில் உள்ள கண்மாய்கள், குளங்கள் முன்னதாகவே நிரம்பிய நிலையில் இருந்தது. நேற்று பெய்த கன மழையினால் கண்மாய்கள் குளங்கள் உடைப்பு ஏற்படும் அபாய நிலையை எட்டிய நிலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தொட்டியம்பட்டி ஊராட்சியில் உள்ள அழகிய நாச்சியம்மன் கோவில் ஊரணியின் சுற்றுச்சுவர் கனமழைக்கு இடிந்து விழுந்துள்ளது.
கோட்டைப்பட்டினம்
கோட்டைப்பட்டினம் கடலோரப்பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், மீமிசல், உள்ளிட்ட பகுதிகளில் கடல் மிகவும் கொந்தளிப்புடன் காணப்பட்டது.

Next Story