நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு குறித்து கணக்கெடுக்கும் பணி தொடங்கியது


நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு குறித்து கணக்கெடுக்கும் பணி தொடங்கியது
x
தினத்தந்தி 25 Nov 2021 6:31 PM GMT (Updated: 25 Nov 2021 6:31 PM GMT)

வேலூர் மாவட்டத்தில் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் குறித்து கணக்கெடுக்கும் பணி தொடங்கியது என்று வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் ஆய்வு செய்தபின்னர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்தார்.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் குறித்து கணக்கெடுக்கும் பணி தொடங்கியது என்று வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் ஆய்வு செய்தபின்னர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்தார்.

மழைநீர் தேக்கம்

வேலூர் மாநகரின் மையப்பகுதியில் அகழியுடன் கூடிய வேலூர் கோட்டை அமைந்துள்ளது. வேலூரில் கனமழை பெய்ததால் கோட்டை அகழியில் தண்ணீர் மட்டம் உயர்ந்தது. இதனால் கடந்த 12-ந் தேதி கோட்டையில் உள்ளே அமைந்துள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் தண்ணீர் தேங்க தொடங்கியது. தொடர்ந்து தண்ணீர்மட்டம் உயர்ந்து தற்போது கால் முட்டி அளவுக்கு தண்ணீர் காணப்படுகிறது.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் மழைநீரில் கால்களை நனைத்தவாறு செல்லும் நிலை உள்ளது. மேலும் பலர் தங்களது செல்போனில் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். எனினும் தேங்கிய தண்ணீர் பக்தர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

நேற்றுமுன்தினம் மாலை முதல் கோவிலில் உள்ள தண்ணீர் மோட்டார் மூலம் வெளியேற்றும் பணி தொடங்கியது. ஆனால் கொஞ்சம் கூட தண்ணீர் குறையவில்லை. தொடர்ந்து மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.

கலெக்டர் ஆய்வு

இந்தநிலையில் நேற்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கோட்டை முதுநிலை பராமரிப்பு அலுவலர் வரதராஜ்சுரேஷ், தாசில்தார் செந்தில், கோவில் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தேங்கிய மழைநீரில் நடந்து சென்று கோவில் வளாகத்தை அவர் பார்வையிட்டார். அப்போது தண்ணீர் தேங்குவதற்கான காரணம் குறித்து கோவில் நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார். கோவிலில் இருந்து மழைநீர் அகழிக்கு செல்லும் கால்வாய் மூலம் தண்ணீர் கோவில் உள்ளே வருவதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த கால்வாயை சுற்றி மணல் மூட்டைகளை வைத்து தண்ணீர் உள்ளே வராதவாறு நடவடிக்கை எடுக்கவும், அதன்பின்னர் தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்றவும் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கோவிலில் இருந்து நீர் வெளியேறும் பகுதியில் இருந்து கோவிலுக்குள் தண்ணீர் வந்துள்ளது. இந்த நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பு குறித்து கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. மேலும் பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியும் நடந்து வருகிறது. குறிப்பாக சதுப்பேரி ஏரி கால்வாய் பகுதியில் சில கட்டிடங்கள் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்தது. அவற்றை அகற்றவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை

இதேபோல மாவட்டம் முழுவதும் நீர்வழிப்பாதைகள் ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காவிரி கூட்டு குடிநீர் வினியோகம் செய்யப்படும் குழாய் மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் உடைந்துள்ளது. உடைந்த குழாய் இணைப்புகள் சரிசெய்யும் பணி நடக்கிறது. 10 நாட்களுக்குள் பணி முடிந்து தண்ணீர் வழங்கப்படும். குடிநீர் வழங்க மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடிநீரில் குளோரின் அளவு அதிகம் இருப்பதாக குற்றச்சாட்டு இருந்தது. அதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தண்ணீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகளில் லாரிகள் மூலம் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story