மாவட்ட செய்திகள்

ராமேசுவரம் முதல்புன்னக்காயல்வரைமன்னார் வளைகுடா கடலில்194 கி.மீ. தூரம் பாசிப்படலம்அழிவை சந்தித்த பவளப்பாறைகள் + "||" + In the Gulf of Mannar 194 km Distance algae

ராமேசுவரம் முதல்புன்னக்காயல்வரைமன்னார் வளைகுடா கடலில்194 கி.மீ. தூரம் பாசிப்படலம்அழிவை சந்தித்த பவளப்பாறைகள்

ராமேசுவரம் முதல்புன்னக்காயல்வரைமன்னார்  வளைகுடா  கடலில்194 கி.மீ. தூரம்  பாசிப்படலம்அழிவை சந்தித்த பவளப்பாறைகள்
மன்னார் வளைகுடா கடலில் 194 கி.மீ. தூரம் பாசிப்படலம்
தூத்துக்குடி, நவ.26-
ராமேசுவரம் முதல் தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் வரை சுமார் 194 கிலோ மீட்டர் தூரத்துக்கு படர்ந்துள்ள பாசிப்படலத்தால் பவளப்பாறைகள் அழிவை சந்தித்து உள்ளன.
மன்னார் வளைகுடா
மன்னார் வளைகுடா கடல், பவளப்பாறைகள், கடல் புற்கள் நிறைந்து பல்லுயிர் பெருக்கத்துக்கு உகந்த பகுதியாகும். இந்த பகுதியை யுனெஸ்கோ அமைப்பு கடந்த 2001-ம் ஆண்டு மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகமாக அறிவித்தது.
இந்த உயிர்க்கோள காப்பகத்தில் 4 ஆயிரத்து 223 வகையான கடல் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் உள்ளன. இதில் 117 வகையான பவளப்பாறைகள், 14 வகையான கடல் புற்கள், 181 வகையான கடல் பாசிகள், 1,147 வகை  மீன்கள், 158 வகை கணுக்காலிகள், 856 வகை மெல்லுடலிகள் உள்ளன. இந்த உயிர்க்கோள காப்பகம் பருவநிலை மாற்றத்தால் அவ்வப்போது பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகத்துக்கு பாசிப்படலம் புதிய அச்சுறுத்தலாக அமைந்து உள்ளது.
பாசிப்படலம்
நாக்டிலுகா சைலன்டிலன்ஸ் என்ற பாசிப்படலம் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழை பெய்யக்கூடிய செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பாசிப்படலம் வேகமாக மன்னார் வளைகுடா பகுதியில் பரவி வருகிறது.
கடந்த 2008-ம் ஆண்டு முதன்முறையாக இந்த பாசிப்படலம் மன்னார் வளைகுடாவில் கீழக்கரை கடல் பகுதியில் வாளை, தலையாரி ஆகிய தீவு பகுதிகளில் கண்டறியப்பட்டது. இந்த பாசி படர்ந்ததால் அந்த பகுதி முழுவதும் பச்சை நிறத்தில் காட்சி அளித்தது. அப்போது ஏராளமான உயிரினங்கள் இறந்தன. மேலும் இந்த பாசிப்படலம் வேகமாக வளரக்கூடியது. கடல் மேற்பரப்பில் பச்சை பசேலென படர்ந்து இருப்பதால், கடல் நீரில் உள்ள ஆக்சிஜன் அளவை குறைக்கிறது. மீன்களின் செவுள்களையும் பாதிக்கிறது.
194 கிலோ மீட்டர் தூரம்
கடந்த 2008-ம் ஆண்டு 17 கிலோ மீட்டர் கடலோர பகுதியிலும், 2019-ம் ஆண்டு 17 கிலோ மீட்டர் தூரமும், 2020-ம் ஆண்டு 100 கிலோ மீட்டர் தூரமும் பாதிக்கப்பட்டது. தற்போது இந்த ஆண்டு (2021) இந்த பாசியின் தாக்கம் இதுவரை இல்லாத அளவு மிகவும் அதிகரித்து உள்ளது. ராமேசுவரம் முதல் புன்னக்காயல் வரை 194 கிலோ மீட்டர் தூரத்துக்கு கடல் பாசி படர்ந்து காணப்படுகிறது.
இதனால் அதிக அளவில் மீன்கள், இறால், நத்தை, கணுக்காலிகள், கடல் அட்டை, கடல் வெள்ளரி, கடல் பாம்பு உள்ளிட்ட பல்வேறு உயிரினங்கள் இறந்த நிலையில் தீவுகளில் கரை ஒதுங்கி வருகின்றன. குறிப்பாக குருசடை, மனோலிபுட்டி, மனோலி தீவுகளில் ஒதுங்கி உள்ளன. பவளப்பாறைகள் வெளிரும் நிகழ்வை போன்று, இந்த பாசிகளும் பவளப்பாறைகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்து உள்ளன. ஆக்சிஜன் அளவு குறைவதால், 2008, 2019-ம் ஆண்டுகளில் பவளப்பாறைகள் பாதிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து இந்த ஆண்டும் பவளப்பாறைகள் பெரும் சேதம் அடைந்து உள்ளன.
பவளப்பாறைகள் அழிவு
இந்த ஆண்டு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் வனத்துறை மற்றும் தூத்துக்குடி சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி நிலைய ஆராய்ச்சியாளர்கள் பாசியின் பரவல் தன்மை மற்றும் பவளப்பாறைகளின் நிலை குறித்து கடலுக்கு அடியில் சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது மண்டபம் பகுதியை சேர்ந்த குருசடை தீவு பகுதியில் சுமார் 500 சதுர மீட்டர் பரப்பில் 102 பவளப்பாறை கூட்டுயிரிகள், மனோலிபட்டி தீவு பகுதியில் 270 சதுர மீட்டர் பரப்பில் 211 பவளப்பாறை கூட்டுயிரிகள், மனோலி தீவு பகுதியில் சுமார் ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பில் 422 பவளப்பாறை கூட்டுயிரிகள் அழிந்து உள்ளன. இதில் அக்ரோபோரா வகை பவளப்பாறை அதிக அளவில் அழிவை சந்தித்து உள்ளன. இதில் 5 சென்டி மீட்டர் முதல் 160 சென்டி மீட்டர் வரை அகலம் கொண்ட பவளப்பாறைகளும் அழிந்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
சிறப்பு நடவடிக்கை
ஏற்கனவே பவளப்பாறைகளுக்கு பருவநிலை மாற்றம் அச்சுறுத்தலாக அமைந்து உள்ளது. தற்போது இந்த பாசியும் பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது. ஆகையால் மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகத்தின் பவளப்பாறைகளை பாதுகாக்க சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.
முடிந்த அளவு பல்லுயிர் பெருக்கத்துக்கு காரணமாக அமைந்து உள்ள பவளப்பாறைகளுக்கு இடையூறுகள் இல்லாமல் பாதுகாக்க வேண்டும். அழிந்த பவளப்பாறைகளை மறுஉருவாக்கம் செய்வதற்கான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்தனர்.