மாவட்ட செய்திகள்

வீட்டு சுவர் இடிந்து விழுந்து சிறுவன் பலி + "||" + The wall of the house collapsed and killed the boy

வீட்டு சுவர் இடிந்து விழுந்து சிறுவன் பலி

வீட்டு சுவர் இடிந்து விழுந்து சிறுவன் பலி
தஞ்சை மாவட்டத்தில் பெய்து வரும் ெதாடர் மழைக்கு வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் 5 வயது சிறுவன் பரிதாபமாக உயிர் இழந்தான்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் பெய்து வரும் ெதாடர் மழைக்கு வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் 5 வயது சிறுவன் பரிதாபமாக உயிர் இழந்தான்.
மீண்டும் தொடங்கிய மழை
தஞ்சை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாளில் இருந்து தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கன மழை பெய்தது.
இந்த நிலையில் தென்மேற்கு வங்க கடலில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதன் காரணமாக 3 நாட்களாக ஓய்ந்து இருந்த மழை மீண்டும் தொடங்கி தீவிரமாக பெய்து வருகிறது.
5 வயது சிறுவன்
தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே உள்ள சின்னமுத்தாண்டிப்பட்டியை சேர்ந்தவர் சலீம். கூலி தொழிலாளியான இவருடைய மனைவி ஷகிலா பானு. இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன். மூத்த மகளுக்கு திருமணமாகி விட்டது. இளைய மகள் ரிஸ்வானா பர்வீன் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறாள். 5 வயதில் அசாருதீன் என்ற மகன் இருந்தான். 
நேற்று முன்தினம் தங்கள் மகனை சலீம் தம்பதியினர் அந்த பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் சேர்த்தனர்.  
சுவர் இடிந்து விழுந்து பலி
அன்று இரவு சலீம் தனது குடும்பத்தினருடன் குடிசை வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தார். தஞ்சை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் சலீம் வசித்து வரும் குடிசை வீட்டு சுவர்கள் ஊறிப்போய் இருந்துள்ளது. இந்த நிலையில் நேற்று அதிகாலை அந்த குடிசை வீட்டின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. 
முன் பக்க சுவர் தூங்கி கொண்டிருந்த சிறுவன் அசாருதீன் மீது விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி ரத்த வெள்ளத்தில் அசாருதீன் உயிருக்கு போராடினான். மற்ற அனைவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. உடனே அசாருதீனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே சிறுவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். 
பெற்றோர்-உறவினர்கள் கதறல்
சிறுவனின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து பூதலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட சிறுவன் அசாருதீனின் உடல் செங்கிப்பட்டியில் உள்ள பள்ளிவாசலில் அடக்கம் செய்யப்பட்டது.