சந்தன மரங்களை வெட்டி பதுக்கிய 2 பேர் கைது


சந்தன மரங்களை வெட்டி பதுக்கிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 26 Nov 2021 1:35 AM IST (Updated: 26 Nov 2021 1:35 AM IST)
t-max-icont-min-icon

தக்கலை அருகே சந்தன மரங்களை வெட்டி பதுக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவற்றை கேரளாவுக்கு கடத்த முயன்றதும் அம்பலமானது.

பத்மநாபபுரம், 
தக்கலை அருகே சந்தன மரங்களை வெட்டி பதுக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவற்றை கேரளாவுக்கு கடத்த முயன்றதும் அம்பலமானது.
சந்தன மரம் கடத்தல்
தக்கலை அருகே உள்ள முத்தலக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 46). இவர் பூச்சிக்காட்டு பத்ரகாளி அம்மன் கோவிலில் செயலாளராக உள்ளார். கடந்த 22-ந்தேதி காலையில் பூச்சிக்காட்டு பத்ரகாளி அம்மன் கோவிலுக்கு அதே பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாமி கும்பிட சென்றனர். அப்போது, அங்கு நின்றிருந்த சந்தன மரத்தை யாரோ மர்ம நபர்கள் வெட்டி சென்றது தெரியவந்தது. 
பின்னர், இதுபற்றி கோவில் செயலாளர் கொடுத்த புகாரின் பேரில் தக்கலை சப்-இன்ஸ்பெக்டர் அருளப்பன் தலைமையிலான போலீசார் கோவில் வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி மர்ம நபர்களை தேடி வந்தனர்.
 சந்தன வாசனை 
தக்கலை அருகே உள்ள பழைய பஸ்நிலையம் சந்திப்பு பகுதியில் பத்மநாபபுரம் நகராட்சி கட்டுப்பாட்டில் டவுண்ஹால் கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் தற்போது கூட்டு குடிநீர் குழாய் பதிக்கும் பணியில் வேலை செய்யும் தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி உள்ளனர். 
இந்தநிலையில் டவுண்ஹால் கட்டிடத்தில் இருந்து சந்தன வாசனை அதிகளவு வீசுவதாக தக்கலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 
சந்தனக்கட்டைகள் 
இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது, அங்கு சந்தன மரக்கட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். 
இதுபற்றி, அங்கு தங்கியிருந்த தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தியதில் 2 பேர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து 2 பேரையும் பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் ெவளியானது. அதன் விவரம் வருமாறு:-
தேனி மாவட்டம்
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள காந்திகிராமி பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 52), அவரது மருமகன் பரமேஷ் (30). அவர்கள் 2 பேரும் தினமும் வேலை முடிந்த பிறகு மாலையில் மோட்டார் சைக்கிளில் தக்கலை சுற்றுவட்டார பகுதிகளுக்கு சென்று சந்தன மரங்கள் எங்கெல்லாம் நிற்கிறது என்று நோட்டமிட்டுள்ளனர். 
அதன்படி, மழை பெய்தபோது பூச்சிக்காடு பத்ரகாளி அம்மன் கோவில் மற்றும் முத்தலக்குறிச்சி சுடுகாடு ஆகிய பகுதிகளில் நின்ற சந்தன மரங்களை கை வாளால் அறுத்து எடுத்து அதை அவர்கள் தங்கி இருந்த இடத்தில் பதுக்கி வைத்துள்ளனர்.
2 பேர் கைது
இதேபோல், தக்கலை பகுதியில் இருக்கும் சில சந்தன மரங்களையும் வெட்டி மொத்தமாக கேரளாவுக்கு கடத்தி செல்ல இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் சந்தன மரக்கட்டைகளையும், கைவாளையும் பறிமுதல் செய்து ராஜா, பரமேஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் பத்மநாபபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதில் ராஜா கடந்த 2019-ம் ஆண்டு தேனி மாவட்டத்தில் சந்தனமரத்தை வெட்டி கடத்திய வழக்கில் கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story