குழந்தையுடன் தூக்குப்போட்ட இளம்பெண் சாவு


குழந்தையுடன் தூக்குப்போட்ட இளம்பெண் சாவு
x
தினத்தந்தி 26 Nov 2021 1:41 AM IST (Updated: 26 Nov 2021 1:41 AM IST)
t-max-icont-min-icon

கூடங்குளம் அருகே 1½ வயது குழந்தையுடன் தூக்குப்போட்ட இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கூடங்குளம்:
கூடங்குளம் அருகே 1½ வயது குழந்தையுடன் தூக்குப்போட்ட இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

டிரைவர்

நெல்லை மாவட்டம் கூடங்குளம் வடக்கு காமராஜ் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவர் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி திலக சவுமியா (வயது 22). இவர்களுக்கு கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. முகுந்தராஜ் (1½) என்ற ஆண் குழந்தை உள்ளது.
கடன் பிரச்சினை காரணமாக, கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த திலக சவுமியா குழந்தையுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

குழந்தையுடன் தூக்கில் தொங்கிய தாய்

நேற்று காலையில் கிருஷ்ணகுமார் வீட்டில் இருந்து வெளியில் சென்று விட்டார். பின்னர் வீட்டில் இருந்த திலக சவுமியா மனதை கல்லாக்கி கொண்டு ஒரே கயிற்றில் ஒரு முனையை தனது கழுத்திலும், மற்றொரு முனையில் குழந்தையின் கழுத்திலும் தூக்குப்போட்டு தொங்கினார்.
அப்போது குழந்தை முகுந்தராஜின் கயிற்றின் முடிச்சு அதிர்ஷ்டவசமாக அவிழ்ந்ததால் தரையில் கீழே விழுந்து காயமடைந்து அலறியது. நீண்டநேரமாக குழந்தை அழுததால் அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து பார்த்தனர். அப்போது திலக சவுமியா தூக்கில் பிணமாக தொங்கியதையும், குழந்தை அழுது கொண்டிருந்ததையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

குழந்தைக்கு தீவிர சிகிச்சை

இதுகுறித்து கூடங்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ மற்றும் போலீசார் விரைந்து சென்று, காயமடைந்த குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இறந்த திலக சவுமியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

உதவி கலெக்டர் விசாரணை

திருமணமான 2½ ஆண்டுகளில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதால் சேரன்மாதேவி உதவி கலெக்டர் சிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
குழந்தையுடன் தூக்குப்போட்ட இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story