குளங்கள்,அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு


குளங்கள்,அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 25 Nov 2021 8:13 PM GMT (Updated: 25 Nov 2021 8:13 PM GMT)

மாவட்டத்தில் பெய்த பலத்த மழையினால் குளங்கள், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

விருதுநகர்,
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில்  பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. 
அருப்புக்கோட்டை 
இந்தநிலையில் அருப்புக்கோட்டையில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியத்திற்கு பிறகு வானில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்தன. பின்னர் மழை பெய்ய ஆரம்பித்தது. அருப்புக்கோட்டை, பாலையம்பட்டி, கோவிலாங்குளம், ஆத்திபட்டி, காந்தி நகர், பந்தல்குடி, ராமசாமிபுரம், கோபாலபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் 4 மணி நேரத்திற்கு மேலாக கன மழை கொட்டி தீர்த்தது.
இந்த மழை காரணமாக  தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீரால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். பள்ளி மாணவர்கள் மழையில் நனைந்தபடி வீட்டிற்கு திரும்பினர். எஸ்.பி.கே. பள்ளி சாலை, பூக்கடை பஜார், விருதுநகர் மெயின்ரோடு, திருநகரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீரோடு கலந்து சாக்கடை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
இந்த மழையினால் அருப்புக்கோட்டை, பாளையம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கண்மாய், குளங்கள், தெப்பக்குளங்கள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. நீண்ட காலத்திற்கு பின் அனைத்து நீர்நிலைகளும் நிறைந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 
ராஜபாளையத்தில்  பெய்த கனமழையால் மகப்பேறு மருத்துவமனை முன்பு மழைநீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
ஆலங்குளம்
ஆலங்குளம், கொங்கன்குளம், டி.கரிசல்குளம், சீவலப்பேரி, அப்பயநாயக்கர் பட்டி, நரிக்குளம், அருணாசலபுரம். சுண்டங்குளம், ஏ.லட்சுமிபுரம், கீழாண்மறைநாடு, குறுஞ்செவல், கோபாலபுரம், கல்லமநாயக்கர்பட்டி உப்புபட்டி, எதிர்கோட்டை, எட்டக்காபட்டி, இ.டி.ரெட்டியபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. 
இந்த மழை மக்காச்சோளம், பருத்தி, மிளகாய், உளுந்து, பாசிப்பயறு போன்ற பயிர்களுக்கு நல்லது என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கூறினர். 
தாயில்பட்டி 
தாயில்பட்டி, மடத்துபட்டி, மண்குண்டாம்பட்டி, கணஞ்சாம்பட்டி, விஜயகரிசல்குளம், வெம்பக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த மழையினால் பள்ளிக்கூடங்கள் முன்கூட்டியே விடப்பட்டன. ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஏழாயிரம்பண்ணை பகுதியில் பெய்த கன மழையினால் கோவில் தெப்பம் நிறையும் நிலையில் உள்ளது. 
வேணியன்குளம் கண்மாய்க்கு 8 ஆண்டுக்கு பிறகு வரத்து கால்வாயில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பாசனத்திற்கு போதுமான தண்ணீர் கிடைக்கும் என விவசாயிகள் கூறுகின்றனர். வெம்பக்கோட்டை அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து உள்ளது. 
சாத்தூர்
சாத்தூர், சத்திரப்பட்டி, சடையம்பட்டி, சின்னஓடைப்பட்டி, பெரியஓடைப்பட்டி, ஒ.மேட்டுப்பட்டி, படந்தால், ரெங்கப்பநாயக்கன்பட்டி, மேட்டமலை, ஆலம்பட்டி, அணைக்கரைப்பட்டி, ராமலிங்காபுரம், ரூக்குமிஞ்சி, அம்மாபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. ஒரு சில பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. பள்ளி மாணவர்கள் நனைந்து கொண்டே வீட்டிற்கு திரும்பினர். 
ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக சாலைகளில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மேற்கு தொடர்ச்சி மலை செண்பகத்தோப்பு அடிவாரப்பகுதிகளில் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
வத்திராயிருப்பு, கான்சாபுரம், அத்திகோவில், பிளவக்கல் அணை, கிழவன் கோவில், நெடுங்குளம், மகாராஜபுரம், தம்பிபட்டி, இலந்தைகுளம், கோட்டையூர் ஆகிய பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.  பிளவக்கல் பெரியாறு அணை, கோவிலாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. 
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் மலைப்பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக மலைப்பாதையில் உள்ள ஆறுகளில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இந்த காட்டாற்று வெள்ளம் வத்திராயிருப்பில் இருந்து மகாராஜபுரம் செல்லும் சாலையில் உள்ள கல்லணை ஆற்றுப்பகுதியில் பெருக்கெடுத்து ஓடியது.
திருச்சுழி 
 திருச்சுழியில் நீதிமன்றத்தை சூழ்ந்து தண்ணீர் தேங்கி நின்றது. நீதிமன்ற பகுதியில் சூழ்ந்துள்ள மழை நீரை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகாசி 
சிவகாசி மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமப்பகுதியில்  திடீரென மழை பெய்ய தொடங்கியது. ஆரம்பத்தில் லேசான சாரல் மழையாக பெய்தது. பின்னர் பலத்த மழை பெய்ய தொடங் கியது. இந்த மழையினால் சிவகாசி, திருத்தங்கல் பகுதியில் பல இடங்களில் சாலை களில் மழை நீர் தெப்பக்குளம் போல் தேங்கி நின்றது. இந்த மழையினால்  சிவகாசி தாலுகாவில் பல கண் மாய்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.
 ஆனைக் குட்டம் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. ஆனையூர் மற்றும் அதனை சுற்றி உள்ள கண்மாய்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
மாவட்டத்தில் பெய்த பலத்த மழையினால் குளங்கள், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. 

Related Tags :
Next Story