ஓசூரில் ஆவின் பொது மேலாளரிடம், முகவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு


ஓசூரில் ஆவின் பொது மேலாளரிடம், முகவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 25 Nov 2021 8:26 PM GMT (Updated: 25 Nov 2021 8:26 PM GMT)

ஓசூரில் ஆவின் பொது மேலாளரிடம், முகவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

ஓசூர்:
ஓசூரில் ஆவின் பொது மேலாளரிடம் முகவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பால் வினியோகம்
கிருஷ்ணகிரியில் உள்ள ஆவின் டைரியில் இருந்து நாள்தோறும் ஓசூர் பகுதிக்கு பல ஆயிரம் லிட்டர் பால் அனுப்பட்டு வருகிறது. இந்த பணியில் 100-க்கும் மேற்பட்ட முகவர்கள் ஈடுபட்டு வீடுகள், தொழிற்சாலைகள், ஓட்டல்கள், டீ கடைகளுக்கும் வினியோகித்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த 20 நாட்களாக வினியோகம் செய்த ஆவின் பால் தரமற்றதாகவும், தண்ணீராகவும் இருந்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். மேலும் பால் வினியோகிக்கும் முகவர்களை கடிந்து கொள்வதாகவும், கவரில் இருந்து பால் கசிந்து வெளியேறி வீணாவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனிடையே கடந்த 23-ந் தேதி ஆவின் டைரியில் இருந்து வினியோகம் செய்யப்பட்ட பால் கெட்டு போனதாகவும், இதனால் முகவர்களுக்கும் சுமார் ரூ.3 லட்சத்திற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த பிரச்சினைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.
வாக்குவாதம்
இந்த நிலையில் பிரச்சினைகள் குறித்து ஆராயவும், முகவர்களின் குறைகளை கேட்டறியவும் ஆவின் பொது மேலாளர் வசந்தகுமார் நேற்று ஓசூர் சிப்காட் வளாகத்தில் உள்ள ஆவின் விற்பனை அலுவலகத்திற்கு வந்தார். அவரிடம் முகவர்கள் தங்கள் பிரச்சினைகளை கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களிடம் பேசிய பொது மேலாளர், உடனடியாக நாளை (இன்று) முதல் தரமான பால் வினியோகிக்க ஏற்பாடு செய்யப்படும். 
மேலும் முகவர்கள் தெரிவித்துள்ள குறைகளுக்கு படிப்படியாக தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தார். இதையடுத்து முகவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். முன்னதாக கெட்டுப்போன பாலை முகவர்கள் கீழே கொட்டி தங்கள் ஆவேசத்தை வெளிப்படுத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story