திருத்தணி அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்: ஓட்டல் உரிமையாளர் பலி
திருத்தணி அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஓட்டல் உரிமையாளர் பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.
பள்ளிப்பட்டு,
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை சேர்ந்த நித்யானந்தா(வயது 38). இவர் திருத்தணி எல்லையில் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டல் நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அதேபோல் திருத்தணி அருகே முருகம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கன்னியப்பன்(40). இவர் முருகம்பட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இந்த 2 மோட்டார் சைக்கிள்களும் முருகம்பட்டு கிராமம் அருகே உள்ள பெட்ரோல் நிலையம் எதிரில் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டது.
இந்த விபத்தில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். இவர்களில் ஓட்டல் உரிமையாளர் நித்யானந்தா திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார். கன்னியப்பன் திருத்தணியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இறந்த நித்யானந்தாவுக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர்.
Related Tags :
Next Story